நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அரச ஊழியரான பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிசாரால் மனிதாபிமானமற்ற ரீதியில் அத்துமீறிய வகையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் கணக்காளராக கடமையாற்றியவர், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீட்டில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட கொள்ளையில் இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன் அவரது மனைவி கொள்ளையரின் வாள்வெட்டில் படுகாயமடைந்தார்.
இவ்வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் இடம் பெறுகின்றது. இவ்வழக்கில் சாட்சியான திருமதி கலைச்செல்வன் முக்கியமான அரச கடமையொன்றுக்கு சென்றதால் தவறுதலாக நீதிமன்றுக்கு சமூகமளிக்காததால் அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு அவருடைய வீட்டுக்கு சென்ற யாழ்ப்பாண பொலிசார் அவரும் அவரது கணவரும் எவ்வளவு மன்றாட்டமாக கேட்டபோதும் அதனை கருத்தில் கொள்ளாது அவரை கைது செய்ததுடன் அவர் கையில் அணிந்திருந்த காப்பு நூலினையும் கழற்றி எறிந்து விட்டு அவரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சாதாரணமாக நீதிமன்ற வழக்குத் தவணைகளுக்கு சரியான முன்னறிவிப்பின்றி சமூகமளிக்காதோருக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்படுகின்றது. அவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுகின்றனர். எனினும் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பல சந்தேகநபர்கள் பொலிசாரால் இதுவரையும் கைது செய்யப்படாமல் உள்ளபோது நள்ளிரவில் அரச சேவையாற்றும் குடும்பப் பெண்ணொருவர் இவ்வாறு அவசர அவசரமாக கைது செய்யப்பட்டமை ஏன் என தெரியவில்லையென பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.