இலங்கை விமானப்படையுடன் புதிய உள்நாட்டு விமான சேவை

தனியார் மற்றும் அரச கூட்டு முயற்சியாக, சிறிலங்கா விமானப்படையை மூலம், உள்நாட்டு விமானசேவை ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், இதுதொடர்பாக சமர்ப்பித்த யோசனைக்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்த உள்நாட்டு விமான சேவை, அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு அமைவாக உருவாக்கப்படும்.

இந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து கேள்விப்பத்திரம் கோரப்பட்டு, தகுதிவாய்ந்த தனியார் முதலீட்டாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.