உலக செஸ் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் நடப்பு சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)- செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) மோதினார்கள்.
உலக செஸ் சாம்பியன் போட்டியின் முதல் 7 ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின் வெற்றி பெற்றார். 9-வது சுற்று ‘டிரா’ ஆனது. 10-வது சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். 11-வது சுற்று ‘டிரா’ ஆனால் 5-5 என்ற சமநிலை ஏற்பட்டது.
இதேபோல 12-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டமும் ‘டிரா’ ஆனது. இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டது. 10 சுற்றுகள் ‘டிரா’ ஆனது. இருவரும் தலா ஒரு சுற்றில் வென்று இருந்தனர்.
ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது.
டைபிரேக்கர் போட்டி நேற்று நடந்தது. ரேபிட் முறையில் 4 ஆட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் முதல் 2 ஆட்டமும் ‘டிரா’ ஆனது. 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் கார்ல்சன் 3-1 என்ற கணக்கில் வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியிலும், 2014-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியிலும் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.
தொடர்ச்சியாக 3-வது முறையாக அவருக்கு உலக சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது.
உலக சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.7½ கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.