கர்ப்பமாக இருந்தால் கத்திரிக்காயை சாப்பிடலாமா?

பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாங்கள் சாப்பிடும் உணவுகளில் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் சில உணவுகள் கருவிற்கு ஆபத்தை விளைவிக்கும். பழங்களில் மட்டுமின்றி, காய்கறிகளின் மீதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக கத்திரிக்காயை கர்ப்பிணிகள் சாப்பிடுவதாக இருந்தால், அதற்கு முன் யோசித்துக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் விலை குறைவில் கிடைப்பதால், இதை சிலர் அடிக்கடி தங்கள் வீடுகளில் சமைப்பார்கள். கர்ப்ப காலத்தில் கத்திரிக்காயை அளவாக சாப்பிட்டால் நல்லது. அதுவே அளவுக்கு அதிகமானால், கேடு தான் விளையும்.

கர்ப்ப காலத்தில் கத்திரிக்காயை அளவாக சாப்பிட்டால், பிறப்புக் குறைபாடுகளுக்கான அபாயம் குறையும், சிசு வளர்ச்சிக்கு உதவும், கர்ப்ப கால சர்க்கரை நோய் தடுக்கப்படும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். கர்ப்ப காலத்தில் கத்திரிக்காயை சாப்பிட தோன்றினால், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இங்கு கர்ப்பிணிகள் கத்திரிக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கத்திரிக்காயில் உள்ள பைட்டோ-ஹார்மோன்கள் மாதவிடாயைத் தூண்டுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கர்ப்பிணிகள் கத்திரிக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்தும்.

கர்ப்பமாக இருக்கும் போது, கத்திரிக்காயை அதிகமாக சாப்பிட்டால், அது கருப்பையை சுருங்கச் செய்து, கருக்கலைப்பு அல்லது குறைப்பிரசவத்தை ஏற்படுத்திவிடும்.

கத்திரிக்காய் அசிடிட்டியை கூட ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் இதை அதிகம் சாப்பிடும் போது, அது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

கத்திரிக்காய் செரிமான பிரச்சனைகளைத் தூண்டும். ஒருவேளை கத்திரிக்காய் நன்கு வேகாமல் இருந்தால், அது அலர்ஜியைக் கூட ஏற்படுத்தும்.