மதனுக்கு உதவிய வர்ஷா வீட்டில் லட்சக்கணக்கில் பணம்: குப்பையில் எரிந்து கிடந்த ஆவணங்கள்

வேந்தர் மூவிஸ் மதனுக்கு உதவிய வர்ஷா வீட்டில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் குப்பையில் எரிந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேந்தர் மூவிஸ் மதன் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதாக கூறி ரூ.84 கோடி வரை மோசடி செய்து விட்டதாகவும், இதனால் அவரை உடனடியாக கைது செய்யும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக பொலிசார் அவரை கடந்த வாரம் திருப்பூரில் வர்ஷா என்பவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் சில சினிமா பிரலங்கள் பலரும் இதில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மதனிடம் பொலிசார் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது மதன் வர்ஷாவின் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் பொலிசார் அன்று காலையிலே வர்ஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்று பொலிசார் சோதனை நடத்தியதில் பல லட்சம் ரூபாய் வரை பணம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் திருப்பூரில் மதனை பொலிசார் கைது செய்வதற்கு முன்னர். வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை மதன் வர்ஷா வீட்டின் பின்புறமாக உள்ள குப்பை தொட்டியில் பலவற்றை எரித்துள்ளதாகவும், அதில் ஒரு சில ஆவணங்கள் எரியாமல் இருந்துள்ளதாகவும், அதை பொலிசார் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.