அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் மகனே தங்கியிருந்தார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் உரையாற்றிய அவர்,
“லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டை, கோத்தாபய ராஜபக்சவின் மகன், தமிந்த மனோஜ் ராஜபக்ச தனது வதிவிடமாக மாற்றியிருந்தார்.
21 மாதங்கள் அவர் அங்கு தங்கியிருந்ததால், 27.69 மில்லியன் ரூபா வாடகை மற்றும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, தொலைக்காட்சி, தொலைபேசி கட்டணம், சிறிலங்கா மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் அவர் அந்த வீட்டில் தங்கியிருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதுபற்றிய தகவல்கள் கிடைத்த பின்னரே, அந்த வீட்டுக்கான வாடகை மற்றும் கட்டணங்கள் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.
கோத்தாபய ராஜபக்சவின் மகன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் எந்த பதவியையும் வகிக்கவில்லை. ஆனால் அவருக்கு, சிறிலங்காவின் இரண்டு படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.” என்றும் அவர் தெரிவித்தார்.