போலந்து நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சவக்கிடங்கில் மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டில் உள்ள Kamienna Gora என்ற நகரில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் 25 வயதான வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுவிடுதிக்கு சென்றுள்ளார்.
நண்பர்களுக்குள் யார் அதிகமாக மது அருந்துவது என்ற போட்டி நிகழ்ந்துள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்ற அந்த 25 வயதான வாலிபர் அடுத்தடுத்து தொடர்ந்து வோட்காவை குடித்துள்ளார்.
பின்னர், ஒரு நிலையில் திடீரென இதயத்தை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
ஆனால், வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து அதற்குரிய ஆவணங்களையும் அளித்துள்ளனர்.
இதன் பின்னர் வாலிபரிடன் உடல் மருத்துவமனையில் இருந்த சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சில மணி நேரத்திற்கு பிறகு சவக்கிடங்கில் இருந்து வினோதமான ஓசை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி கதவி திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, உள்ளே நிர்வாண நிலையில் அந்த வாலிபர் மீண்டும் உயிர் பிழைத்து நின்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், ‘ உடலில் ஆடை இல்லாததால் அதிகமாக குளிர்கிறது. போர்த்திக்கொள்ள ஏதாவது கொடுங்கள்’ என அந்த வாலிபர் காவலாளியிடம் கூலாக கேட்டுள்ளார்.
வாலிபர் பேசுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனடியாக பொலிசாருக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.
காவலாளி கூறியதை நம்பாத பொலிசார் மற்றும் மருத்துவர்கள் அங்கு பரபரப்பாக விரைந்து சென்று பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
பின்னர், வாலிபரை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிருடன் தான் இருக்கிறார். இனி அவர் வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளனர்.
நடந்தவற்றை முழுவதுமாக அறிந்த ‘தான் மீண்டும் உயிர் பிழைத்து வந்துள்ளேன். இதனை உற்சாகமாக கொண்டாட வேண்டும்’ என தீர்மானித்த அவர் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் மது விடுதிக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.