வெட்ட வெட்ட மீண்டும் துளிர்விடும் வாழை மரத்தின் பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை. இதில் வாழைப்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும்.
இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புச்சத்து அதிகப்படியாக உட்கிரகிக்கப்படுவதால் இரத்தச் சோகை என்பது தலை தூக்காது. துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும்.
இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம், மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை இவைகளால் வாயு சீற்றம் அதிகமாகி வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இப்புண்கள் ஆற வாழைப்பூவை குறைந்தது மாதத்துக்கு 5 நாட்கள் சமைத்து உண்ணலாம்.
மூல நோய்கள், இரத்தம் வெளியேறுதல், உள் மூல – வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண், வாய்துர்நாற்றம் போன்றவைகளை நிவாரணமாக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டது வாழைப்பூ. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சினைகளை களைந்தெறியும் தன்மை கொண்டது.
மொந்தன், பாளையங்கோட்டை வகைகளின் வாழைப்பூ உண்பது சால சிறந்ததாகும். வாழைப்பூ வடை, கட்லட், பக்கோடா என பலகாரங்களாகவும் செய்து உண்ணலாம்.