இன பேதம் என்பதை எதிர்கால மாணவர் சமுதாயம் ஒழிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் கிழக்கு, தெற்கு கல்வி திணைக்களங்கள் இணைந்து நடாத்திய தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்டப் பயிற்சிப் பாடசாலைக்கு வருகை தந்தார்.
குறித்த நிகழ்வை ‘சகோதரப் பாடசாலைகளுக்கான வேலைத்திட்டம்’ எனும் தொனிப்பொருளில் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கத்திற்கான அலுவலகம் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் காலி, மாத்தறை, கம்பகா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்ட பாடசாலைகளில் இருந்து வருகை தந்த மாணவர்கள் கலந்த கொண்டனர்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மூவின மாணவர்களோடும் அருகருகே அமர்ந்திருந்து அந்யோந்யமாகக் கலந்துரையாடினார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,
‘இந்நிகழ்வின் நோக்கமானது நாடு முழுவதும் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் ஒவ்வொரு சகோதர பாடசாலையை உருவாக்குதலாகும்
மாணவர்களிடம் வலியுறுத்திய அவர் இன பேதம் என்பதை எதிர்கால மாணவர் சமுதாயம் ஒழிக்க வேண்டும். அத்தோடு அதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுயதொழில் வாய்ப்பு, பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.