அமைச்சர்களை கதி கலங்க வைத்த மைத்திரி

பிரதான விளக்கை எரிய விட்டு பயணிக்கும் முக்கியஸ்தர்களின் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வீதி பாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது தீவிரவாதப் பிரச்சினை நாட்டில் இல்லை என்பதால், ஏழு அல்லது எட்டு வாகனங்கள் சூழ பயணிக்க வேண்டிய தேவை இல்லை என, தான் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாகவும், இதன்போது தமக்கு பின்னால் ஒரு பாதுகாப்பு வாகனம் மட்டுமே வந்தால் போதும் என அமைச்சர்கள் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏழு அல்லது எட்டு வாகனங்கள் புடைசூழ பயணிக்கும் முக்கியஸ்தர்களின் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு, வலது, இடது பற்றி பிரச்சினையில்லை என கூறிய ஜனாதிபதி, அதனால் இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இதுபோன்று பயணிக்கும் வாகனங்களின் பின்னால் செல்வது வெலே சுதாவா, ஆமி சம்பத்தா என்பது யாருக்கும் தெரியாது எனவும் குற்றவாளிகளும் இதுபோன்ற பாதுகாப்புடன் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே இது பற்றி ஆராய வேண்டும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.