யாழ்ப்பாணத்தை வாட்டியெடுத்த நாடா புயல் வலுவிழப்பு – தொடரும் மழை வீழ்ச்சி

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ‘நாடா’ சூறாவளி வலுவிழந்துள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், வடக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதுடன், கடற்பகுதி கடும் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை காங்கேசன்துறையிலிருந்து 120 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்த நாடா புயல் நள்ளிரவு யாழ் குடாநாட்டை அண்மித்த பகுதியூடாக தமிழ்நாட்டைக் கடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக நாளை வடமாகாணத்தின் கடற்பரப்பு மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடும் காற்றும், அதிக மழைவீழ்ச்சியும் காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், புயல் தாக்கம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் வட மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் தொடர்ச்சியான மழையுடன் கூடிய குளிர் நிலவியததக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ள ‘நாடா’ புயல் வலுவிழந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று அறிவித்துள்ளார்.