எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக கூறி 127 மாணவ-மாணவிகளிடம் ரூ.84.27 கோடி மோசடி செய்ததாக பட அதிபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியிருந்த அவர் கடந்த மாதம் 21-ந் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் அவரது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்தபோது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் மதன் சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மாஜிஸ்திரேட்டு பிரகாஷ்குமார் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் மாணவ-மாணவிகளிடம் பணம் வசூலித்ததை மதன் ஒப்புகொண்டுவிட்டார். வசூல் செய்த பணத்தில் 80 சதவீதத்தை எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடமும், அதன் தொடர்புடைய நிறுவனங்களிடமும் ஒப்படைத்துவிட்டதாக மதன் போலீஸ் காவல் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட 127 மாணவ-மாணவிகளிடமும் உரிய பணத்தை கண்டிப்பாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.