வீட்டு மருத்துவமாக இப்போது பிள்ளைகள் டூத்பேஸ்ட்டை பருக்களில் தடவுவது சகஜமாகிவிட்டது. இது தவறான முறை. கண்டிப்பாக முயற்சி செய்யக்கூடாது. இவர்கள் பற்பசையை பருக்களில் தடவினால் உடனடியாக குணமாவதாக நினைக்கிறார்கள். இதுபோல செய்வதால் பருக்கள் உள்ள இடத்தில் அரிப்பு ஏற்பட்டு, மேலும் சிவந்து வீங்கி விடும். சிலவகை குளியல் சோப், டியோடரன்ட், பற்பசை மற்றும் பாடி வாஷ்களில் ட்ரைக்ளோசன் (Triclosan) என்ற பாக்டீரியா எதிர்ப்பு மூலப்பொருள் உள்ளது.
ட்ரைக்ளோசன், பருக்களை நீக்கும் கிரீம்களிலும் ஒரு கூடுதல் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டாலும், உண்மையில் இதனால் எந்தப் பயனும் இல்லை. ‘பாக்டீரியா எதிர்ப்பு மருந்து (Anti Bacterial) பருக்களை குணமாக்கிவிடும்’என தவறாக புரிந்து கொண்டு பருக்களில் பற்பசையை தடவும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இப்போது சந்தையில் விதவிதமான பற்பசைகள் வந்துவிட்டன. இத்தகைய தயாரிப்புகளில் Benzoyl peroxide, Salicylic acid, Sulphur, Flouride போன்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதோடு, பற்களை வெண்மையாக்க, பற்கூச்சத்தை போக்க என்று சொல்லப்படும் பற்பசைகளில் கூடுதல் ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கக்கூடும். இவை சென்சிட்டிவான சருமத்தில் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஒரு மருந்துப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன் எலிகளிடத்தில் பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு, அரசிடம் முறையான அங்கீகாரம் பெற்ற பின்னர்தான் மருத்துவர்களால் நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் தாங்களாகவே இதுபோன்ற தவறான முயற்சிகளில் இறங்கினால் அதன் விளைவுகளை சம்பந்தப்பட்ட நோயாளிகளே எதிர்கொள்ள நேரிடும்.
பற்பசை பற்களுக்கானது மட்டுமே. அதை பருக்களின் மேல் தடவக்கூடாது. வீட்டு மருத்துவமாக, மஞ்சள், சந்தனம் போன்ற இயற்கைப் பொருட்களை உபயோகிக்கலாம். அல்லது சரும மருத்துவரின் ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. மாறாக, இயற்கை நமக்கு கொடுத்த அழகான முகத்தில், தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து கோரமாக்கி விடக்கூடாது”