வடக்கில் மது பாவனை 400 வீதத்தினால் அதிகரிப்பு!

வட பகுதியில் மதுப்பாவனை 400 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் 2015ம் ஆண்டு ஒரு தனிநபரின் மதுபான பாவனை 5.7 லீற்றராக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது வாய்மூல கேள்விக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிமல் ரத்னாயக்க எம்.பி. கேள்வி எழுப்பும் போது, 19-05-2009ம் திகதி வரைக்கும் யாழ்.மாவட்டத்தில் மதுபான நிலையங்களின் எண்ணிக்கை யாது?

2010 முதல் 2015 ஆண்டு வரையான ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான நிலையங்களின் எண்ணிக்கையை ஆண்டின்படி வெவ்வேறாக குறிப்பிட முடியுமா?

தற்போது யாழ்.தனிநபர் ஒருவரின் மதுபான பாவனை எவ்வளவு என்பதை சபைக்கு அறிவிப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விகளுக்கு நிதியமைச்சர் பதிலளிக்கையில், 19-05-2009 வரைக்கும் யாழ்.மாவட்டத்தில் 49 மதுபான விற்பனை நிலையங்களே இருந்துள்ளன.

இதன் பிரகாரம் 2010ம் ஆண்டில் 03 மதுபான விற்பனை நிலையங்களும், 2012ல் இரண்டும், 2013ல் நான்கும், 2015ல் ஒன்றும் விற்பனை நிலையங்களாக புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 2015ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மது பாவனை நுகர்வு 5.7 லீற்றராக பதிவாகியுள்ளது என்றார்.

இதன்போது பிமல் ரத்னாயக்க மீண்டும் கேள்வி எழுப்புகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் 400 வீதம் மதுபாவனை அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது உண்மையா என்ற போது, ஆம் வடக்கில் மதுபாவனை 400 வீதம் அதிகரித்துள்ளது என்றார்.