சம்பந்தன் அனைவரதும் தேசியத் தலைவர்! பாராளுமன்றில்.புகழாரம்

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இல்லையேல் மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் இல்லை என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க சபையில் தெரிவித்தார்.

விக்னேஸ்வரனின் இனவாத செயற்பாடுகளில் சம்பந்தன் பங்கேற்காமை வரவேற்றகத்தக்கது என சபையில் குறிப்பிட்ட அவர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை பெரும்பன்மை சிங்கள மக்களும் தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய மட்டத்தில் ஜே.வி.பி. அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததை நாம் எதிர்க்கவில்லை.

எதிர்க் கட்சித்தலைவர் சம்பந்தனை முழு நாட்டு மக்களும் எதிர்கட்சித்தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அனைவரும் தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். ‘

எங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துக்கள்’ என்று இரத்தினப்புரியில் பாரிய வாழ்த்துப்பதாகை கூட வைக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவ்வாறிருக்கையில் நாங்கள் சம்பந்தனை மதிக்கின்றோம். அவரும் அவருடைய கட்சியினரும் சகல இன மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனிடம் இனவாதம் இல்லை. ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்தவரான வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தீவிரவாதம் உள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அரசியல் உயிர் வாழ்வதற்கு விக்னேஷ்வரனின் இனவாத பேச்சே காரணமாகவுள்ளது. எனினும் விக்னேஷ்வரனின் இனவாத செயற்பாடுகளில் கூட்டமைப்பு தலைவர் பங்கேற்காமை மகிழ்ச்சியளிக்கின்றது.

வடக்கில் நடைபெறும் சம்பவங்கள் தெற்கில் பெருப்பித்து காண்பிக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் ச.தோ.ச தாக்கப்பட்ட போது சிங்களவர்களுக்கு அடிக்கின்றார்கள் என்றெல்லாம் கூறினார்கள். அவை அனைத்தும் தவறாகும் என்பதை நாம் ஆராய்ந்தறிந்துள்ளோம்.

இதேபோன்று தான் அனைத்து விடயங்களும் காணப்படுகின்றன.தமிழ் மக்களையோ முஸ்லிம் மக்களையோ நசுக்கி எந்தவிதமான அரசியில் வெற்றியையும் யாரும் பெற்றுவிடமுடியாது.

ஒருவரின் உரிமைகளை , பிரச்சினைகளை மதிக்க வேண்டும். யுத்தம் ஏற்பட்டமைக்கு வடக்கில் உள்ளவர்கள் தெற்கையும் தெற்கில் உள்ளவர்கள் வடக்கையும் கையைக்காட்ட முடியாது. அதற்கு அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும்.

யுத்தம் நடைபெற்ற வடக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.6சதவீதத்தினையே பங்களிப்புச்செய்கின்றது. அந்த பகுதியின் அபிவிருத்திக்காக அடுத்தாண்டு வரவு செலவுத்திட்டத்தில் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டியது அவசியமாகின்றது என்றார்.