பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு இடமளித்துள்ளது.
பெயரளவில் செய்ய வேண்டியவற்றினை செய்யாமல் விடுவதற்கு ஒத்துழைப்புத் தருமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஜனாதிபதி கேட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இனப்படுகொலையில்இருந்து தப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறாயின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கின்றதா? என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலையில் இருந்து அமெரிக்கா இலங்கையை பாதுகாத்துவிட்டது. உள்ளக விசாரணையினை அனுமதியளித்துள்ளதெனில் காப்பாற்றியமை உறுதியாகின்றது.
பெயருக்கு இலங்கையில் விசாரணை செய்வதாக காட்டிக்கொண்டு போர்க்குற்றத்தினை மூடி மறைப்பதற்கான வாய்ப்பினை அளித்துள்ளது.
மூடி மறைக்கும் விடயத்தினைக் கூட செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்பினைத்த தருமாறே ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேட்கின்றார்.
எமது மக்கள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். இந்த விடயங்களை நாங்கள் இன்று நேற்றுச் சொல்லவில்லை.
ஐ.நா தீர்மானம் என்ற விடயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எமது கருத்துக்களைமக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றோம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அமெரிக்கா இடம் அளித்துள்ளது. இதனாலேயே பல விடயங்களை விமர்சித்தும் உள்ளோம். எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும்.
இதனால், தீர்மானங்களை வெறுமனவே ஆட்சி மாற்றம் என்ற கோணத்தில் செயற்பட்டமையினால், வரக் கூடிய அழுத்தங்கள் அனைத்தையும் மூடி மறைத்து அரசாங்கத்திற்கும் தப்பிக்கொள்ளும் வாய்ப்பினையும் கொடுத்துள்ளது.
பெயரளவில் செய்யக் கூடிய விடயங்களை கூட செய்யாமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டு என்றே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேட்டுள்ளார்.
மேற்கு நாடுகள் மகிந்த ராஜபக்ஸ சார்பான சீன சார்ந்த அபாயம் வரலாம் எனநினைப்பதனால், தற்போதுள்ள மைத்திரி மற்றும் ரணில் கூட்டணி அரசாங்கம் பலம் இல்லாமல் இருக்கும் நிலையில், தற்செயலாக திரும்பவும் ஆட்சி மாறி சீனா சார்ந்த ஆட்சி இலங்கையில் அமர்ந்தால், அந்த ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில்,பெயரளவில் ஐ.நாவில் அதன் தீர்மானங்களை உயிருடன் வைத்துக்கொள்வதற்கான நோக்கம் மேற்குலக நாடுகளிற்கு இருக்கின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்திலும் பெயரளவில் நடைமுறைப் படுத்துவதற்கே வைத்திருக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோணத்தில் இருந்து ஆணித்தனமாக நியாயம் கிடைக்க கூடிய வகையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் தற்போதைக்கு எதையுமே எதிர்பார்க்க முடியாது எனவும் இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.