சபரிமலை செல்லும் பாதையில் உள்ள புனிதமான இடங்கள்

சபரிமலை மட்டும் புனிதமானது அல்ல. அங்கு செல்லும் பாதையிலும் பல்வேறு புனிதமான இடங்களை ஐயப்ப பக்தர்கள் அடைந்து அதன் மகத்துவத்தால் சிறப்பு பெறலாம். அந்த புனித தலங்களின் பெருமைகளைப் பார்ப்போம்.

பேரூர்தோடு :

எருமேலியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் பேரூர் தோட்டை அடையலாம். இங்கு நீராடிய பிறகே பக்தர்கள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இங்குள்ள பாறையில் ஐயப்பன் அமர்ந்து இளைப்பாறியதாக கூறப்படுகிறது. சுவாமி உடல் பட்ட இந்த பாறைகளில் பக்தர்கள் அரிசிப் பொடியை தூவி இங்கு வழிபடுகின்றனர்.

காளவெட்டி :

மணிகண்டனுடைய மகிஷி சம்காரத்தை காண பூமிக்கு வந்த பரமேசுவரன் இங்குள்ள ஒரு மரத்தில் தன் காளையை கட்டி விட்டு மகிஷிமர்த்தனத்தை கண்டதாக கூறப்படுகிறது. இங்கு பரமேசுவரன் காளையின் சுந்தரரூபத்தை காணலாம்.

அழுதா நதி :

பம்பா நதியின் ஒரு கிளை நதியாகும் இது. மகிஷி ஐயப்பனால் சுற்றி எறியப்பட்ட போது அவள் விழுந்த இடம் அழுதா. அழுதா நதியில் ஐயப்ப பக்தர்கள் மூழ்கி நீராடுகின்றனர். கன்னி ஐயப்பன்மார்கள் அழுதாவில் மூழ்கி ஒரு சிறிய கல்லை எடுக்கவேண்டும். இதை கல்லிடும் குன்றில் இட வேண்டும்.

கல்லிடும் குன்று :

மகிஷியின் பூத உடலை ஐயப்பனின் பூத கணங்கள் கற்களால் எறிந்து மூடிய இடம். எனவே அழுதையில் மூழ்கி எடுத்த கற்களை ஐயப்ப பக்தர்கள் இங்கு இடுகிறார்கள்.

கரிமலை :

கரிமலை ஏறும் ஐயப்பன்மார் கரிமலை நாதனின் சிலைக்கு மஞ்சள் தூவி வணங்கி கரிமலை இறங்க தொடங்குகின்றனர். மணிகண்டன் தன் திவ்யாஸ்திரம் உபயோகித்து அமைத்த ஒரு நாளும் வற்றாத கிணறு ஒன்று இங்கே உள்ளது.

நீலிமலை :

மகிஷியின் வளர்ப்பு மகளான நீலியின் நினைவாக உள்ள இந்த மலையை வணங்கி கடினமான மலை ஏற்றத்தை ஆரம்பிக்க வேண்டும். இதன் இரு பக்கங்களில் உள்ள ஆழமான பள்ளங்களில் துர்தேவதைகளை வதம் செய்வதற்காக பக்தர்கள் அரிசி உருண்டைகளை எறிவது வழக்கம்.