அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாகிறது என்பது தெரியுமா?

ஒருவருக்கு அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாவதற்கு மரபணுக்கள் மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் உள்ளன. இங்கு அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரக கற்கள் ஒருமுறை வந்து, அதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டால் முற்றிலும் கரைந்து குணமாகிவிடும். ஆனால் சிலருக்கு சிறுநீரக கற்கள் அடிக்கடி வரும். இதற்கான காரணம் என்னவென்றும் பலருக்கும் தெரியாது.

ஒருவருக்கு அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாவதற்கு மரபணுக்கள் மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் உள்ளன. இங்கு மும்பையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ப்ரதீப் ஷா, அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார்.

போதிய நீர் பருகாமல் இருப்பது

ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 லிட்டர் நீரைப் பருக வேண்டும். அதிலும் ஏற்கனவே சிறுநீரக கற்கள் வந்திருந்தால், அவர்கள் தவறாமல் 3 லிட்டர் நீரை பருக வேண்டும். இதற்கு குறைவான அளவில் நீரைப் பருகி வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.

கனிமங்கள் நிறைந்த நீர்

குடிக்கும் நீரில் கனிமங்கள் அதிகம் இருந்தாலும், அவை சிறுநீரக கற்களை வரவழைக்கும் என்பது தெரியுமா? அதனால் தான் குழாய் நீரைப் பருகுபவர்களை விட, கிணற்று நீரை பருகுபவர்களுக்கு சிறுநீரக கற்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது.

அசாதாரணமான சிறுநீர்ப் பாதை கட்டமைப்பு

சிறுநீர் கழிக்கும் போது, தங்கு தடையின்றி சிறுநீர் சுமூகமாக வெளியேறினால், எப்பிரச்சனையும் இல்லை. ஆனால் அதுவே சரியாக சிறுநீர் வெளியேறாமல் இருந்தால், சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே உங்களது சிறுநீர்ப் பாதையின் கட்டமைப்பு அசாதாரணத்தன்மையுடன் இருந்தால், ஒவ்வொரு வருடமும் அல்ட்ராசவுண்ட் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

உணவுப் பழக்கங்கள்

உங்களுக்கு கார்போனேட்டட் பானங்கள் பருகும் பழக்கம் இருந்தால், உடலில் அதிகளவு அமிலம் காரணமாக, மீண்டும் மீண்டும் சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே ஒருமுறை சிறுநீர் கற்கள் வந்தால், அமிலம் நிறைந்த உணவுகள், பானங்கள், உப்புமிக்க உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தைராய்டு புற்றுநோய்

ஆம், தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் வந்தால், அது அதன் அருகில் உள் பாராதைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். பாராதைராய்டு சுரப்பி கால்சியத்தை வளர்ச்சிதை மாற்றம் செய்யும் முக்கிய பணியைச் செய்யக்கூடியது. இந்த சுரப்பி பாதிக்கப்பட்டால், அது உடலில் கால்சியத்தை படியச் செய்து, சிறுநீர்க் கற்களை உருவாக்கும்.