தொலைபேசியில் அமெரிக்காவோடு தொடர்பு கொண்ட மைத்திரி! நாடு திரும்பிய மகிந்தவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று கடந்த மாதம் 23ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார்.

சீனா சென்ற அவர், அந்நாட்டு அரச அதிகாரிகள், அரசியலில் உள்ள உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அவரின் சீன விஜயத்தினை இந்திய அரசாங்கம் சாதாரணமாக பார்க்கவில்லை என்பதை இந்திய ஊடகங்கள் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தன.

மகிந்த ராஜபக்சவின் சீன விஜயம் குறித்து இந்திய அரசாங்கம் உண்ணிப்பாக அவதானித்துவருவதாக இந்திய ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

தெற்காசியாவில் அகலக்கால் பதிக்கமுனையும் சீன அரசாங்கத்தோடு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நெருங்கிய தொடர்பை பேணியிருந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை தொடர்ந்து இலங்கையில் நீடிக்க விடாது இந்தியாவும், அமெரிக்க அரசாங்கம் இணைந்து வீழ்த்தியது.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த நகர்வை மகிந்த ராஜபக்ச மீண்டும் சீனாவோடு இணைந்து கொண்டு மேற்கொள்ள முயற்சிக்கின்றார் என பரவலாகப் பேசப்பட்டது.

இதற்கிடையில் இலங்கையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு பேராசிரியர் பீரிஸ் தலைவராக்கப்பட்டிருக்கிறார்.

அந்தக் கட்சியின் கிளைக்காரியாலயத்தை சீனாவில் திறந்து வைத்திருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.

சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பெயரில் அங்கு சென்ற மகிந்த ராஜபக்ச புதுக்கட்சியின் கிளைக்காரியாலயத்தை அங்கு திறப்பதற்கான காரணம் என்ன என்பதே இப்போதுள்ள கேள்வி.

மகிந்தவின் இந்தச் செயற்பாட்டை இந்திய அரசாங்கம் எச்சரிக்கையோடு தான் கண்காணித்து வந்திருக்கிறது.

நேற்று முன்தினம் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக புகைப்பட ஆதாரத்தோடு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் மீறிஹான வீட்டில் இந்த இரகசிய சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு, சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிமான நேரம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்விதமாக தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும் மகிந்த ராஜபக்சவின் சீன விஜயத்தில் இந்திய அரசாங்கம் கடுப்படைந்ததாகவும், அது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கவே இந்தச் சந்திப்பு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில், மைத்திரி, ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்பும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும், இந்திய இலங்கை உறவில் பாதகத் தன்மையை விளைவிக்க வேண்டாம், என்பதை வலியுறுத்துவதற்காகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்று இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

இதற்கிடையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள மைக் பென்ஸ்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார நல்லுறவுகள் குறித்து இதன் போது இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அமெரிக்காவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வருமாறு அவர் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் இனவாதக் கருத்துக்கள் மேல் எழுந்துவரும் நிலையில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் முகமாக கூட்டு எதிர்க்கட்சியினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவ ஆட்சி ஏற்படலாம் என்று எச்சரிக்கை கூட நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகிந்த ராஜபக்சவோடு திடீரென்று ஒரு இரகசிய சந்திப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதற்கு ஒருபடிமேல் சென்று மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவின் துணை ஜனாதிபதியோடு பேசி தன்னுடைய நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கு எந்த முயற்சியையும் வெற்றியில் முடியக்கூடாது என்பது விதி போலவே தோன்றுகின்றது.

ஏனெனில் இராணுவ ஆட்சி என்று பேசியபோதே, கருணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கோத்தபாயவையும் கைது செய்யப்படலாம் என்கிறார்கள் சிலர். இதற்கிடையில் இந்திய அரசாங்கம் சுதாகரித்துக் கொண்டு மகிந்தவை எச்சரிக்கும் பாணியில் தங்கள் இரகசிய சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனா, இழந்து போன தன்னுடைய செல்வாக்கை மீள்கட்டுமானம் செய்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றது. மகிந்தவோ கைவிட்டுப்போன அதிகாரத்தை பெற எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் தீவிரமாக இருக்கின்றார்.

ஆனால், எல்லாக் கதவுகளும் இறுகப் பூட்டப்பட்டு ஒரு குறுகிய எல்லைக்குள் தான் இருக்கமுடியும் என்பதை நிரூபித்து வருகின்றன.

மகிந்தவின் எந்த முயற்சியாக இருந்தாலும் மிக இலகுவாகவும், அமைதியாகவும் மைத்திரிபால சிறிசேன தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்தாண்டில் அமெரிக்காவில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்கள் எப்படியிருக்கும் என்பதை வைத்தே மைத்திரி, மகிந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து தெளிவான பார்வையை செலுத்த முடியும்.

ஏனெனில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ஆசிய பிராந்தியத்தின் மீதான பார்வையை எப்படி செலுத்துவாரோ அதை வைத்தே மகிந்தவின் மீள் உருவாக்கமும், மைத்திரியின் தொடர் வெற்றியும் எப்படியான மாற்றத்தில் வந்து நிற்கும் என்பதை அவதானிக்க முடியும்.