மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். தனியார் வங்கி அதிகாரியான இவர், தன்னுடைய கணவர் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்த பின்னரும் கூட, வங்கி பணியை விடாமல் அதை தொடர்கிறார். இது தவிர, அம்ருதா பட்னாவிஸ் சிறந்த பின்னணி பாடகி என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம்.
இவர் ஏற்கனவே சில பக்திப்பாடல்களையும், திரை இசை பாடல்களையும் பாடி இருக்கிறார். இசை ஆல்பம் ஒன்றில் பாடி, நடனம் ஆட வேண்டும் என்பது இவரது நீண்டநாள் கனவாக இருந்திருக்கிறது. தற்போது, 74 வயது நடிகர் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து கனவை அவர் மெய்ப்பித்துவிட்டார்.
மும்பை ஓபரா ஹவுசில் நடிகர் அமிதாப்பச்சனும், அம்ருதா பட்னாவிசும் சேர்ந்து இசை ஆல்பம் ஒன்றுக்கு நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அமிதாப்பச்சன் தன்னுடைய டுவிட்டரில் தகவல் வெளியிட்டிருக்கிறார்.