நாடாளுமன்றின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் போராட்டங்கள் நடத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகவில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாக குற்றம் சுமத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
எனினும், நாடாளுமன்றின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் போராட்டம் நடத்தப்படக் கூடாது என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதுவான் சந்தன கலங்சூரிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸார் இந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு உத்தரவிடக் கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
வீதியின் இரு மருங்கிலும் போராட்டத்தை நடத்த முடியும் எனவும் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் போராட்டம் நடத்தப்படக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.