தி.மு.க தலைவர் கருணாநிதி ‘ஒவ்வாமை’ நோயால் பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டதால் நேற்று முன்தினம் அதிகாலை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் தொடர்கிறது.
மருத்துவ குழுவினர் அளித்து வரும் சிகிச்சையால் கருணாநிதி வேகமாக குணம் அடைந்து வருகிறார்.
அவருக்கு ரத்த அழுத்தம், ஸ்கேன்,எக்ஸ்ரே போன்ற பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அனைத்து பரிசோதனை முடிவுகளும் திருப்தி தரக்கூடிய வகையில் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இப்போது கருணாநிதிக்கு தேவையான அளவு ஊட்டச் சத்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் ராஜாத்தி அம்மாள், செல்வி, கனிமொழி, மற்றும் குடும்பத்தினர் கருணாநிதியை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார் அவர் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துக்களையும் தெரிவித்துகொண்டார்.
கருணாநிதிக்கு உடல் நலம் தேறி விட்டதால் நாளை (ஞாயிற்றுகிழமை) மாலை அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.