உள்நாட்டு யுத்தத்தின் வடுக்களுடன் வாழும் தமிழ் மக்களை தற்போது வாட்டி வதைக்கும் பிரச்சினையாக உருவாகியுள்ளது சிறுநீரகம் சம்பந்தமான நோயாகும். பொதுவாக சிறுநீரக நோய் என்றால் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் முன்பெல்லாம் அதிகமாக ஏற்பட்டது. தற்போது அது தலைகீழாக மாறி விட்டது. இது ஒரு பெரிய விடயமாக பார்க்கப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பொறுத்த வரையில்
ஒவ்வொரு வருடமும் 2500 பேர் வரை நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதுடன் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாரத்துக்கு 60 என்ற மீள்சுழற்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1993 ம் ஆண்டு முதலாவது சிறுநீரக நோயாளி அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் அந்தப் பகுதியில் 2.3 வீதமாக அதிகரித்ததுடன் கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் அவ்வீதம் 15.5 வீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த நோயாளிகளின் அதிகரிப்புக்கு குடிநீர், உணவு, விவசாய இரசாயனம், மக்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் என்று பல்வேறு விடயங்கள் காரணங்களாக அமைந்திருக்கின்றது.
அதிலும் விவசாய இரசாயனமே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இலங்கையில்தான் விவசாய இரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. மற்றைய நாடுகள் 10_ – 12 என்ற அலகுகளில் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தும் போது இலங்கையில் 284 அலகுகள் என்ற அளவில் இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது.
இரண்டாவது இடத்தில் உள்ள பங்களாதேஷ் 164 அலகுகள் என்ற அளவில் உள்ளது. அந்நாட்டை விட இலங்கையின் பாவனை இரண்டு மடங்காக உள்ளது. 1960 – 1970 களிலேயே இலங்கையில் விவசாய இரசாயனப் பாவனை தொடங்கியுள்ளது. அதன் பின்னரே இலங்கையில் சிறுநீரக நோயாளர்களும் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
இலங்கையிலே 10_ -15 வீதமான மக்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை உள்ளது. சிறுநீரக நோய்களில் உள்ள முக்கிய பிரச்சினை சிறுநீரகத்தில் சுமார் 90 வீதம் பழுதடையும் வரை அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை. ஆக சிறுநீரக நோயாளி ஒருவர் வைத்தியசாலைக்கு வரும் போது அது பிந்திய நிலையாக இருக்கும். அப்போது மருத்துகளால் குணப்படுத்துவது கடினமானது.
விவசாயம் செய்யப்படுகின்ற போது பாவிக்கப்படுகின்ற பலவகை கிருமிநாசினிகள் மற்றும் வளமாக்கிகளாலும் சேகரிக்கப்படும் தானியங்களில் ஏற்படும் பூஞ்சணங்களின் வளர்ச்சி காரணமாகவும் மக்கள் அதிகம் நச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். சிறுநீரகத்தை இந்த நஞ்சுகள் தாக்குவதால் மக்கள் சிறுநீரக நோய்க்கு இலகுவில் உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
அத்துடன் மருத்துவ சிட்டை இன்றி இலகுவில் பெறக் கூடிய சில மருந்து வகைகளை உட்கொள்பவர்களும் சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் சந்தர்ப்பம் ஏற்படுவதுடன், நோவுக்கான மருந்துகள், இலகுவாக எல்லோர் கைகளிலும் தாராளமாக பெறக் கூடிய பனடோல் பாவனை போன்ற மருந்துகளை அதிகம் உள்ளெடுப்பவர்கள் வயது வேறுபாடின்றி இப்பாதிப்புக்கு முகம் கொடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பிரதேசங்களில் விவசாய இரசாயனப் பொருட்கள் கொண்டு செல்வதில் இருந்த தடை காரணமாக அப்பகுதிகளில் குறைவாக இருந்த சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது. ராஜரட்ட பகுதியில் முதலில் கண்டறியப்பட்டமையால் ராஜரட்ட சிறுநீரக நோய் என்றும் இதற்கு பெயர் உண்டு. இன்று இந்நோய் அந்தப் பகுதியையும் தாண்டி பொலனறுவை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மற்ற தென்னிலங்கை பகுதிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றது.
இப்போது இந்த நோய் மெதுவாக வடக்கு நோக்கியும் நகர்ந்து வருவதுடன் வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியா மாவட்டம் 02வது இடத்தினை மிக விரைவில் பெற்றுள்ளமை எமக்கு எல்லாம் அதிர்ச்சி ஊட்டக் கூடிய விடயமாகும். அத்துடன் இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் உள்ள பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்துள்ளமை மிக வருந்தத்தக்க விடயமாகும். தமிழர் அதிகம் வாழும் வடக்கில் தற்போது ஆயிரம் பேர் வரையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி சுமார் 600 பேர் வரையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களில் 120 பேர் வரையில் வாரத்தில் இரு தடவை இரத்த சுத்திகரிப்புச் செய்வதுடன் இது தவறின் இரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு நோய் தீவிரமாகி பரிய விபரீதத்தினை தோற்றுவிக்க கூடும்.
இந்நோய் அதிகளவில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களால் மட்டும் தான் வருகின்றது என கூறி விட முடியாது. சிறுநீரை அடக்கி வைத்திருப்பதாலும் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சிறுநீர் வருவதனை உணர்ந்தால் உடனே கழித்து விடவேண்டும். பெண்கள் தாங்கள் செல்லும் இடங்களில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதனால் தண்ணீர் குடிப்பது குறைவாக உள்ளதுடன் சிறு வயதில் இருந்து கல்விச்செயற்பாடுகளுக்காக பெண்கள் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு செல்கின்றனர்.
அவ்விடங்களில் பொதுவாக மலசல கூட வசதிகள் திருப்தியாக இருப்பதில்லை. குறிப்பாக பாடசாலைகளில் கூட ஆசிரியர்களின் மலசலகூடம் தவிர மாணவர்களின் மலசல கூடங்கள் சுகாதார சீர்கேடாகவே உள்ளன. இதனால் அத்தகைய மலசலகூடங்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் சிறுநீர் கழிக்க முடியாத நிலையில் அவர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.
பொதுவாக சிறுநீரகம் செயலிழந்தால் சாதாரண மருந்துகள் மூலம் சீர் செய்ய முடிவதில்லை. இலங்கையைப் பொறுத்த வரையில் வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் ஐந்தில் ஒரு பங்கானது சிறுநீரக நோய்க்கான செலவுகளிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கீழ் சிறுநீரக நோய் தடுப்புக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதன் மூலம் மட்டும் சிறுநீரக பிரச்சினையை தீர்த்து விட முடியாது.
விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் கிருமிநாசிகளின் அளவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஆண்டில் இருந்து என்றாலும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.