இன்று மட்டு நகருக்கான யாத்திரை தொடரும்! ஞானசார தேரர் எச்சரிக்கை

நான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள்.

எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும் பாதுகாப்புத் தரப்பினர் உங்கள் முன் இப்பயணத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

பெண்மைத்தனமான தமிழர்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் எமது வீரம் கொண்ட படைவீரர்களை பெண்களாக்கி வைத்துள்ளது இந்த நல்லிணக்க அரசு.

இது எமக்கு கதிர்காம யாத்திரை போன்று புனிதமானது. வீதியில் யாருக்கும் கேலி செய்து செல்ல வேண்டாம். இவர்களில் பலர் அப்பாவிகள்.

உண்மையான புலிகள் பௌத்த மதத்தை அழிக்க அங்கு இருக்கிறார்கள்.எம்மில் பலர் குழப்பகரமான முறையில் புகைப்படம் எடுத்து தரவேற்றியுள்ளீர்கள்.

சிங்களவர்களை சிங்களவர்களாகிய நீங்களே காட்டிக் கொடுக்காதீர்கள். யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம்.

நாளை நம் யாத்திரை தொடரும். என புணானை விகாரையில் நேற்று (03) இரவு விருந்துபசாரத்துக்கு முன் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பின் பல பாகங்களுக்கும் பொதுபல சேனா குழுக்கள் மட்டு நகரை நோக்கி படையெடுக்க உள்ளனர்.

புணானை தொடர்க்கம் மட்டக்களப்பு நகர் பல பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிசார் இரவு பகலாக வீதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை தற்பொழுதும் அவதானிக்க முடிகின்றது.

இன்று மட்டக்களப்பு நகரில் என்ன நடக்குமோ என்ற ஒருவித பதற்றம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்துகொண்டிருக்கின்றது.

நேற்று புணானை பகுதியில் பொதுபல சேனா குழுக்களின் அடாவடித்தனத்தினால் போக்குவரத்து செய்த பிரயாணிகளில் குழந்தைகள் தொடக்கம் நோயாளிகள் வரை பலர் சுமார் 6 மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து தடையினால் பெரும் சிரமப்பட்டதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.