பிடல் காஸ்ட்ரோவுக்கு சிலை வைக்க கூடாது: கியூபா அதிபர் உத்தரவு

கியூபா நாட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் உடல் தகனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சாம்பல் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளை சுற்றிவந்த காஸ்ட்ரோவின் சாம்பல், அவரது விருப்பத்தின்படி இன்று சான்டியாகோ நகரில் உள்ள சான்ட்டா இபிஜெனியா கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சான்டியாகோவில் திரண்டுள்ளனர்.

உள்ளூரை சேர்ந்த மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்த மக்களிடையே இன்று பேசிய கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ, பிடல் காஸ்ட்ரோவின் பெயரை அரசு நிறுவன கட்டிடங்கள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சூட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல், மார்பளவு சிலை, முழு அளவு சிலை மற்றும் மணி மண்டபங்கள் அமைக்கப்படுவதையும் தனது வாழ்நாளின்போது பிடல் காஸ்ட்ரோ விரும்பியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த பாராளுமன்ற கூட்டத்தின்போது இந்த உத்தரவுக்கு அனுமதி அளிக்கும் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.