இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை என்பது என்றுமே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது.
அதுவும் கோடைகாலங்களில் அருகில் உள்ள குளம், குட்டைகள் வற்றவிட்டால் கிராமங்களில் வசிக்கும் மக்களின் நிலமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
தண்ணீரை சேகரிப்பதற்காக இவர்கள் பல மைல் தூரம் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. அப்படி எடுத்து வரும் தண்ணீரை குடித்து தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ளும் மனிதர்கள், இந்த தண்ணீரை சுமப்பதற்காகவே பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அநியாயத்தின் உச்சகட்டமாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது தென்கன்மல் கிராமம். இந்தியாவில் உள்ள வறட்சியான கிராமங்களில் இதுவும் ஒன்று.
கோடைகாலம் வந்துவிட்டால் இந்த கிராமத்தில் உள்ள கால்நடைகள் வறட்சியின் காரணமாக உயிரிழக்கின்றனர். மேலும் மனிதர்களும் நோய் நொடிகளுக்கு ஆளாகின்றனர்.
இந்த கிராமத்தில் 500 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இவர்கள் யாருக்கும் அண்டை கிராமத்துடன் பெரிதாக தொடர்பு எதுவும் இல்லை. 15 லிட்டர் தண்ணீர் எடுத்துவர 12 மணிநேரம் செலவிட வேண்டியிருக்கிறது.
ஆனால், இந்த தண்ணீரை சுமப்பதற்காக இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்துகொள்கின்றனர். காரணம் என்னவெனில் ஒரு பெண்ணால், தனது குடும்பத்தினை பராமரிக்கும் பணியினை செய்து, பல் மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் சுமந்து வர முடியவில்லை. இதனால் தண்ணீரை சுமக்கும் பணிக்காவே, ஒரு ஆண் பல திருமணம் செய்துகொள்கிறார்.
சகாராம் பகத் என்பவருக்கு முதல் மனைவி மூலமாக ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது முதல் மனைவிக்கு வீட்டை பாதுகாக்கவும், குழந்தைகளை காக்கவுமே நேரம் சரியாக போய்விடுகிறது.
இது தவிர ஒரு நாள் செலவு செய்து தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை ஏற்படுவதால், சகாராம் பகத் வீட்டுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வரவே இரண்டு திருமணம் செய்துள்ளார்.
இந்தியாவில் முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும். அப்படி இருக்கையில் ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு பெண்ணை திருமணம் செய்வது, நாட்டில் சட்டம் இருந்தும் அது பயனற்ற நிலையையே எடுத்துரைக்கிறது.