நமது மனித இனம் எமது பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக பிரபல பௌதிகவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாவ்கிங் தெரிவித்துள்ளார்.
இந்த ஆபத்தான கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும் விடயங்களில் மக்கள் அனைவரும் இணைந்து மிகவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆபத்தான கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும் விடயங்களில் முக்கியமாக காலநிலை மாற்றம் மற்றும் நோய்களை ஸ்டீபன் ஹாவ்கிங் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் செயற்கைத் தொழிநுட்பமான AI (Artificial intelligence) இன் காரணமாக அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் பொது மக்கள் வேலை வாய்ப்புக்களை இழந்து வருவதையும் இவ்விடங்களை ரோபோட்டுக்கள் ஆக்கிரமித்து வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிகழ் காலத்தில் மனித இனம் கொண்டுள்ள தொழிநுட்பமானது எமது கிரகத்தை அழிக்கப் போதுமானது எனவும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியரும் பிரபல பௌதிகவியலாளரான ஹாவ்கிங் தெரிவித்துள்ளார்.
இவர் முக்கியமாகக் குறிப்பிட்ட பிரச்சினைகளில் அளவுக்கு மீறிப் பெருகி வரும் சனத்தொகையும் உள்ளடங்குகின்றது. ‘தி கார்டியன்’ (The Guardian) என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரைக்கு இவர் அளித்த மறுமொழியிலேயே எமது பூமியின் வருங்காலம் குறித்து தன்னை கவலை கொள்ள வைக்கும் விடயங்களாக இவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரலாற்றில் இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்கு மனித இனம் இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, அளவுக்கு மீறிய சனத்தொகை, ஏனைய உயிரினங்களின் அழிவு, மிகத் தீவிரமான தொற்று நோய்கள், கடல்களில் நச்சுத் தன்மை மற்றும் ஆஸிட் ஆகியவை கலத்தல் என்பன மனித இனம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சினைகள் என ஹாவ்கிங் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில நூறு வருடங்களில் நாம் ஏனைய நட்சத்திரங்களில் உள்ள கிரகங்களில் மனித இனத்தின் காலனிகளை அமைக்கக் கூடும். ஆனால் இன்றைய சூழ்நிலையிலோ நமக்கு என இருப்பது இந்த ஒரேயொரு பூமி தான்.
இதனால் நாம் அனைவரும் இணைந்து இதைப் பாதுகாக்க முன் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் திடீரென வெடிக்கக் கூடிய அணுவாயுதப் போர் அல்லது மரபணு ரீதியாகத் தயாரிக்கப் பட்ட மிக மோசமான வைரஸ் அல்லது பூகோள வெப்பமயமாதலால் ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்கள் போன்ற ஏதேனும் விதங்களில் எம் பூமியில் உயிர் வாழ்க்கை துவம்சம் ஆகும் அனர்த்தம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனித இனம் விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டு வேறு காலனிகளை அமைக்காவிடில் எமது இனத்துக்கு வருங்காலமே இருக்காது என ஹாவ்கிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.