எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த விடமாட்டோம் என பிரதி அமைச்சர் அருத்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரவு – செலவுத்திட்டத்தில் அரச தொழில் முயற்சி, ஆரம்ப கைத்தொழில், வர்த்தக கைத்தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்துகொண்டு இதற்கு எதிர்ப்பு வெளியிடுவோம். இது தொடர்பில் தனி ஒருவரின் தீர்மானத்திற்கு வழி வகை செய்துவிட்டு கபீர் ஹாஷிம், எரான் விக்கிரமரத்னவை நிதி குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வழிவகை செய்ய வேண்டாம் .
ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமான சேவையை தனி யார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியாருக்கு 80 வீதமும் அரசாங்கம் 20 வீதமாக பகிரும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இது பாரிய அநீதி. இதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். இலாபமீட்ட முடியுமான நிறுவனங்களை விற்கவேண்டாம்.
மிஹின் லங்கா நிறுவனம் இறுதித் தறுவாயில் நல்ல நிலைக்கு வந்தபோதும் அதன் சேவையை தற்போது நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் மூன்று விமானங்கள் பெறும் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்ட போது இதன் மூலம் அதிக தொகை நஷ்டம் செலுத்த நேரிட்டுள்ளது.
எனவே, எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த விடமாட்டோம். அரசாங்கத்தில் இருந்து கொண்டு தனியார் மயப்படுத்தலுக்கு எதிர்ப்பு வெளியிடுவோம்.
முன்னைய ஆட்சியின் போது விமான சேவையில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. எனினும் அதற்காக எமது உடமைகளை விற்க முடியாது.
விமான சேவையின் நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானத்தை வெளிதரப்பினர் எடுக்க இடமளிக்க முடியாது.
விமான சேவை நடவடிக்கைகள் தொடர்பான சில தீர்மானங்கள் அமைச்சர்களுக்கு தெரியாது. எனவே அமைச்சர் கபீர் ஹாஷிம், எரான் விக்கிரமரத்ன ஆகியோரை நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் தீர்மானங்கள் எடுக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.