தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் கிடைத்ததுமே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோவுக்கு படையெடுத்தனர்.
தொடர் சிகிச்சையின் பலனாக அவர் உடல் தேறி வந்தது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா. அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால், அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சென்னை வந்தனர். தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து அவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகி விட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக தொண்டர்கள் கதறி அழுதனர். அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
ஆனால், உடனடியாக இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கம் வாயிலாகவும், அறிக்கை வாயிலாகவும் மறுத்துள்ளது
அந்த அறிக்கையில், ‘முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோவின் இந்த அறிக்கையால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் அதிமுக கொடியை கம்பத்தில் உயரப் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.