ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளை எழுதிக்கொடுத்தவர் யார் தெரியுமா?

1982ஆம் ஆண்டு பாடசாலைகளில் சத்துணவு வழங்கும் தனது திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அனைவரையும் வசீகரிக்கும் முகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

அவருடைய நோக்கத்துக்கு மிகச் சிறந்த முகமாக ஜெயலலிதா தோன்றினார். கிட்டத்தட் கட்சியில் சேர்ந்து ஒருமாதம் மட்டுமே ஆன நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு சத்துணவுத் திட்டம் பற்றி பிரச்சாரம் செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டது.

தனக்குக் கிடைத்த பொறுப்பை சிரத்தையுடன் செய்தார் ஜெயலலிதா. ஊர் தோறும் சென்று மேடைப் பேச்சுகள் நிகழ்த்தினார். சத்துணவு திட்டத்தை தமிழ் மக்கள் போற்றும் பொன்னான திட்டமாக ஆக்கியனார்.

அதுமட்டுமில்லாமல், சத்துணவுத் திட்டத்திற்காக ரூ.40,000 தொகையை கொடையாக அளித்தார். சத்திணவு திட்டத்திற்கான பிரச்சாரத்தில் தன்னை அர்ப்பணித்து செயல்பட்ட ஜெயலலிதாவுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்குக் காத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

பின்னர், உருவான சத்துணவு திட்டத்தின் உயர்மட்டக்குழுவில் ஜெயலலிதா இடம் பிடித்தார். பின்னர், 1983ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியும ஜெயலலிதாவுக்கு வந்தது.

அடுத்தடுத்து கட்சியில் தனக்குக் கிடைத்த இரண்டு பொறுப்புகளும் தனது சிறப்பான செயல்பாட்டுக்கு உரிய அங்கீகாரம் என்பதை உணர்ந்திருந்தார் ஜெயலலிதா. அதனால், தமிழகம் முழுவதும் அவரது தீவிர பிரச்சாரம் சூடுபிடித்தது.

இந்த காலகட்டத்தில் அவரது பிரச்சார சுற்றுப்பயணங்களில் ஆற்றிய மேடைப் பேச்சுக்களை வலம்புரி ஜான் தான் எழுதிக்கொடுத்தார். இருந்தாலும், மேடையில் அவர் தனது உரையை அமைத்துக்கொண்ட விதம் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவரது பெயரை பதிய வைத்தது.

எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதை ஜெயலலிதாவுக்கு அப்போதிருந்தே கிடைக்கத் தொடங்கிவிட்டது. ஜெயலலிதாவின் மேடைப்பேச்சு ஆற்றலுடன் ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் அவருக்கு இருந்த புலமையும் சேர்ந்து அடுத்த கட்ட நகர்வை அளித்தது.

அவ்வாறே, மாநிலங்களைவை உறுப்பினராக முதல் முதலில் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. மாநிலங்களவையில் அவரது பேச்சு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுக்கும் உரித்தானது. அத்துடன், அதிமுக துணைத்தலைவர் பதவியும் வந்தது.