தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுள் ஒருவரும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைப் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களது தந்தையார் பெரியார் அமிர்தநாதன் அவர்களது மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று மனவேதனை அடைகின்றேன்.மன்னார், விடத்தல் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற பெரியார் அமிர்தநாதன் அவர்கள், விடத்தல்தீவு மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைப் பெற்ற பின்னர் ஆயுர்வேத வைத்தியராகத் தனது தொழிலை மேற்கொண்டு சமூகப்பணி ஆற்றி வந்தார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் தனது 83 வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (04.12.2016) பிற்பகல் காலமானார்.
கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தனது இளவயது முதலே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்ட காலங்களில் அவர் பல நெருக்கடிகளைச் சந்தித்தபோதெல்லாம் அவருக்குப் பக்கபலமாக நின்று செயற்பட்டவர் மறைந்த பெரியார் அமிர்தநாதன் அவர்கள்.அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி மற்றும் மூத்த மகன் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் உட்பட பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் அனைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இரா.சம்பந்தன், பா.உ.,
எதிர்க்கட்சித் தலைவர்,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு