ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்குக்கு அதிகாலை 5 மணியில் இருந்தே அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்ல, செல்ல ராஜாஜி ஹாலை நோக்கி மக்கள் அலை, அலையாக வந்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதை ஏற்கனவே எதிர்பார்த்த போலீசார் நெரிசல், தள்ளு முள்ளு போன்ற அசம்பா விதங்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையுடன் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதன்படி வி.ஐ.பி.க்கள் வந்து செல்வதற்கு ஒரு வழியும், பொதுமக்கள் வந்து செல்ல மற்றொரு வழியும் ஏற்படுத்தப்பட்டது.
கூவத்தையொட்டி அமைந்துள்ள சிவானந்தம் சாலை வழியாக பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை வழியாக ராஜாஜி ஹால் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த வரிசையில் நீண்ட நேரம் நின்று வந்தனர்.
அனைத்து தரப்பு மக்களும் ஜெயலலிதா முகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக ராஜாஜி ஹால் வாயிலில் படிகள் மீது சற்று உயர்த்தி அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அங்கு அருகில் வந்தால் தள்ளுமுள்ளு பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று கருதி சுமார் 50 அடி தூரத்தில் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தியபடி சென்றனர்.
அஞ்சலி செலுத்த வந்தவர் களில் அ.தி.மு.க.வினர் தவிர பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் திரண்டு வந்ததை காண முடிந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர். அவர்கள் ஜெயலலிதா உடலைப் பார்த்து கும்பிட்டப்படி சென்றனர்.
9 மணிக்கு பிறகு பொது மக்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது. பெரும்பாலானவர்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறியபடி இருந்தனர். “அம்மா முகத்தை இனி என்று காண் போம்” என்று பெண்கள் அழுதனர்.
10 மணிக்கு பிறகு ராஜாஜி ஹால் பகுதியை நோக்கி திரண்ட மக்கள் வெள்ளம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் போலீசார் அலை, அலையாக வந்த மக்களை வரிசையில் ஒழுங்குப்படுத்த முடியாதபடி திணற நேரிட்டது.
அண்ணா சாலை “பார்க்கிங்” ஆக மாறியது
ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்த அ.தி.மு.க. வினரும், பொதுமக்களும் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் வந்திருந்தனர். காரில் வந்தால் பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று பயந்து மோட்டார்சைக்கிள்களில் வந்திருந்தனர்.
அவர்கள் அந்த மோட்டார்சைக்கிள்களை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள தெருக்களில் நிறுத்தி விட்டு ராஜாஜி ஹாலுக்கு நடந்தே வந்தனர். பலர் மெரீனா கடற்கரை பகுதியில் வாகனங் களை நிறுத்தி விட்டு வந்தனர்.
இதனால் அண்ணா சாலை பார்க்கிங் போல மாறி காணப்பட்டது. அண்ணாசிலையில் இருந்து நீண்ட தொலைவுக்கு எங்கு பார்த்தாலும் ஆங்காங்கே மோட்டார்சைக்கிள்களாக நிறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே 10.30 மணிக்கு பிறகு பிரபலங்கள் வரத் தொடங்கினார்கள். பிரபலங்கள் அனைவரும் எம்.எல்.ஏ. ஆஸ்டல் வழியாக உள்ளே சென்று ராஜாஜி அரங்கத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 11.30 மணியளவில் அந்த வழி யிலும் நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் அதிகரித்தது.
இதன் காரணமாக ராஜாஜி அரங்கம் மக்கள் வெள்ளத்தில் குலுங்கியது. அந்த அரங்கை சுற்றி நாலா புறமும் மக்கள் வெள்ளம் கடல்போல காட்சி அளித்தது.
நேரம் செல்ல, செல்ல இனி அரங்கம் தாங்காது என்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் நிறைந்தது.
அஞ்சலி செலுத்த வந்தவர் களில் பெரும்பாலான பெண்கள் தலையில் அடித்தப்படி அழுது கொண்டே இருந்தனர். அ.தி.மு.க. மகளிர் அணிப் பெண்கள் “அம்மா வாழ்க” என்று கோஷம் போட்டப்படி இருந்தனர். சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அவர் களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர்.
மக்கள் வெள்ளத்தில் கண்ணீர் மழை அதிகமாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில் தொண்டர்களில் சிலர் ராஜாஜி அரங்கம் மீது ஏற முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மக்கள் வருகை மதியம் மேலும் அதிகரித்தது. இதனால் ராஜாஜி அரங்கம் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
என்றாலும் சாதாரண பொதுமக்கள் நீண்ட தூரத்தில் இருந்து நடந்தே வந்து ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி சென்றனர்.