ஜெயலலிதா மக்கள் மனதில் அழியா இடம்பிடித்த ஒரு தலைவி – எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் செய்தி வெளிட்டுள்ளார்.

ஜெயலலிதா ஜெயராம் அவர்களது மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைகின்றேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இந்தியாவின் மைசூர் மாநிலத்தில் ஜெயராம் – வேதவல்லி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.

பெங்களூர் பிஷப் கொட்டன் மகளிர் உயர் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், சென்னை சேர்ச் பார்க் பிறசென்ரேசன் கொன்வென்ட்டிலும் அதனைத் தொடர்ந்து சென்னை, ஸ்ரெல்லா மேரீஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

பின்னர் சினிமாத்துறையில் பிரவேசித்து இரசிகர்களைக் கவரும் வகையில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் அபிமானத்தைப் பெற்றிருந்தார்.

1982 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பாண்மையைப் பெற்றுக்கொண்டதுடன், 1983 ஆண்டு அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் அக்கட்சியின் பிரசாரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984 ஆம் ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1989 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்து வந்தார்.

முதலமைச்சராகவிருந்த மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியைப் பெற்றதன் மூலம் 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை முதலமைச்சராக முதலாவது தடவையாகப் பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து 2001, மே மாதம் முதல் 2001 செப்ரெம்பர் வரை இரண்டாவது தடவையும், 2002 மார்ச் முதல் 2006 மே வரை மூன்றாவது தடவையும், 2011 மே முதல் 2014 செப்ரெம்பர் வரை நான்காவது தடவையும், 2015 மே முதல் ஐந்தாவது தடவையாகவும் முதலமைச்சராகப் பதவி வகித்த மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் ஆறாவது தடவையாக மே 2016 ஆம் ஆண்டு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மறையும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்தார்.

அன்னாரது அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளையும் சோதனைகளையும் சந்தித்தபோதும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்டு மக்கள் மனதில் அழியா இடம்பிடித்த ஒரு தலைவியாக மிளிர்ந்தார்.

காலத்துக்குக் காலம் இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்த அவர், எமது மக்களது உரிமை தொடர்பில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்திய மத்திய அரசுடனும் பேச்சுக்களை நடாத்தி வந்தார்.

இலங்கையில் இன்னல்களுக்குள்ளாகி தமது பாதுகாப்புக்கெனத் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளை அரவணைத்து அவர்களுக்கு தனது அரசின் மூலம் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களை வாழவைத்தமையை இவ்வேளையில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

மறைந்த முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.