அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கு நடந்தது. பின்னர் செவ்வாய்க்கிழமை காலை ராஜாஜி அரங்குக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெ.வின் உடலுக்கு அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், திமுக பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக எம்பி அன்புமணி, த.மா.கா. ஜி.கே.வாசன், தேமுதிக விஜயகாந்த், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்பட தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் இறுதி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது. அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பங்கேற்றனர்.