மரணிக்கும் வரை சிங்களவரை தமிழ் மண்ணில் கால்பதிக்க விடாத “அம்மா”!

தாம் மரணிக்கும் வரை சிங்கள பேரினவாதத்தைச் சேர்ந்த எந்த ஒரு வீரரையும் தமிழ்நாட்டு மண்ணில் கால்பதிக்க விடாமல் உலகத் தமிழினம் போற்றிய “ஈழத் தாயாக” திகழ்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெயிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வளர்ந்தபோது அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர். ஆனால் அதே அதிமுக ராஜீவ் படுகொலையை முன்வைத்து அந்த இயக்கத்துக்கு பரம எதிரியாகப் போனது காலத்தின் துயரம்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் மீண்டும் அதிமுக தன்னுடைய ‘தாய்’ முகத்தை ஈழத் தமிழர்களிடத்தில் காட்டியது. 2009ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை சிங்களப் பேரினவாதம், பன்னாட்டு படைகளுடன் கூட்டு சேர்ந்து படுகொலை செய்த இனப்படுகொலைக்கு தமிழினமே நீதிகோரி போராடியது…

அதிர வைத்த தீர்மானங்கள்

ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரு மாநில அரசோ, நாடோ இந்த நீதிக்கான பெரும்பயணத்துக்கு துணை நிற்காத துயரம் சூழ்ந்த தருணம்…

தமிழ் நாட்டில் இருந்து நம்பவே முடியாத வகையில் சர்வதேசமே திடுக்கிடும் வகையிலான தீர்மானங்களுடன் புலிப் பாய்ச்சலாக சீறிப் பாய்ந்தது முதல்வர் ஜெயலலிதாவின் அந்த குரல்…

வரலாற்று சிறப்புமிக்கவை

தமிழக சட்டசபையில், சுதந்திரத் தனித் தமிழீழம் அமைவதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாதி மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திலே நிறுத்த வேண்டும்.

என்பது உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தம் சிம்மக் குரலால் சட்டசபையிலேயே நிறைவேற்றியவர் மறைந்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள்…

தாங்கிய பெருமரம்

தாங்கள் பிடித்துக் கொண்டு மேல் மூச்சுவிட ஏதேனும் கொம்பு கிடைக்காதா? என தத்தளித்த உலகத் தமிழினத்துக்கு இதே உங்களைத் தாங்குகிற பெருமரமாகவே நிற்கிறேன் என அள்ளி அரவணைத்து “ஈழத் தாயாக” உருவெடுத்து நின்றார் முதல்வர் ஜெயலலிதா…

இதனால் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற புதிய முழக்கம்…

7 தமிழர் விடுதலை

அது மட்டும்தானா… ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வாசிகளாக இருந்த பேரறிவாளவன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடிவெடுத்துவிட்டோம்… இந்திய மத்திய அரசே உன் பதில் என்ன? மாநில சுயாட்சிக்கான மாதரசியாய் மிரட்டல் விடுத்தார் ஜெயலலிதா. மறுத்த மத்திய அரசுடன் இந்திய உச்சநீதிமன்றத்தில் சட்ட யுத்தத்தை கடைசிவரை நடத்தினார் ஜெயலலிதா.

சிங்கள ராணுவ பயிற்சி

இவைமட்டுமா? எங்கள் தமிழரை படுகொலை செய்த சிங்கள ராணுவத்துக்கு எங்கள் தமிழ் மண்ணிலேயே ஆயுத பயிற்சி கொடுப்பீர்களோ? என இந்திய மத்திய அரசின் பிடரியை உலுக்கியதோடு தமிழ்நாட்டுக்குள் சிங்கள ராணுவ வீரர்கள் மட்டுமல்ல விளையாட்டு வீரர்களே வரக் கூடாது என புரட்சி முழக்கமிட்டதுடன் அதை தாம் மரணிக்கும் வரை நடைமுறைப்படுத்தி காட்டியவர் ஜெயலலிதா.

பேரறிவாளனின் அம்மா…

இலங்கைக்குப் போன தமிழக வீரர்களை வரவழைத்து அவர்களை அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சிங்களத்தின் ஈரக்குலையை நடுங்க வைத்தவர் ஜெயலலிதா.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக மகனின் விடுதலைக்காக பரிவித்த பேரறிவாளானின் தாயாரை அழைத்து உங்கள் மகன் விடுதலைக்கு நான் பொறுப்பு என ஆறுதல் கூறி அதனை நடைமுறைப்படுத்த மரணம் தழுவும் வரை போராடிய மனிதாபிமான சின்னம் ஜெயலலிதா… இனி இல்லை என்பது உலகத் தமிழினத்துக்கு பேரிழப்பு என்பது சரியான சொல்லல்ல… பெரும் பின்னடைவு என்பதே யதார்த்தம்.