ஜெயலலிதாவின் கடைசி நாள் டிசம்பர் 5 என வரலாற்றில் பதிவாகிவிட்டது. இதைப்போல, ஜெயலலிதா வாழ்வில் கடைசி என்று வரலாற்றில் பதிவாகப்போகிற சில நாட்கள், சில நிகழ்வுகள், சில சம்பவங்கள்..
வேதா நிலையத்தில் கடைசி நாள்…
போயஸ் கார்டன், வேதா நிலையம்தான் ஜெயலலிதாவின் வீடு. இந்த உலகில் அவருடைய உணர்வோடு கலந்த ஒரு இடம் வேதா நிலையம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வேதா நிலையம் மிக முக்கியமான பாத்திரம். அந்த வீட்டில் ஜெயலலிதாவின் கடைசி நாளாக இருந்தது, செப்டம்பர் 22-ம் தேதி. ஜெயலலிதாவின் உயிரைப் பறித்த உடல்நிலைக் கோளாறுகள் வெளிப்படத் தொடங்கி, அவர் வேதா நிலையத்தில் அன்றுதான் மயங்கிச் சரிந்தார். அந்த செப்டம்பர் 22 தான் வேதா நிலையத்தில் ஜெயலலிதா கடைசியாக வாழ்ந்த நாள்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கடைசி நாள்
1989-க்குப் பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான் ஜெயலலிதாவின் ஒரே குறிக்கோள். அதற்காகவே சிந்தித்தார். அதற்காகவே உழைத்தார். அதற்காகவே வாழ்ந்தார். அந்தக் கோட்டைக்குள் அவர் சந்தித்த அவமானம் கொடுமையானது. ஆனால், அதே கோட்டையில் அவர் ஈட்டிய பெருமைகள் புகழ்வாய்ந்தவை. ஒரு முறை அல்ல… இருமுறை அல்ல… 6 முறை முதலமைச்சராக அங்கிருந்து ஆட்சி நடத்தினார். சென்னை விமானநிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிலையங்கள், 200 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைக்க, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஜெயலலிதா செப்டம்பர் 21-ம் தேதி வந்தார். அதுதான் அங்கு அவர் காலடித் தடம் பதிந்த கடைசி நாள்.
கடைசியாகச் சந்தித்த பொதுஜனங்கள்…
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செப்டம்பர் 21-ம் தேதி, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிற்குழுக்களுக்கு வாகனங்கள், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி அது. அதில் ஜெயலலிதாவின் கைகளால் உதவிகளைப் பெறுவதற்கு நீலகிரியில் இருந்து பெண் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள்தான், நடமாடும் ஜெயலலிதாவை கடைசியாகப் பார்த்த பொதுஜனங்கள்.
கடைசி அர்ப்பணிப்பு – புத்தகங்கள்!
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவாக, அவர் இந்த உலகத்துக்கு கடைசியாக புத்தகங்களை அர்ப்பணித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சாரிட்டபிள் டிரஸ்ட், நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான புத்தகங்களை, அரசு மருத்துவக் கல்லூரி நூலகங்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அதைப் பெற்றுக் கொண்டார். செப்டம்பர் 21-ம் தேதி இது நடந்தது.
கடைசி மரியாதை – பகுத்தறிவு சூரியனுக்கு…
முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக மலர்தூவி அஞ்சலி செலுத்தியது, தந்தை பெரியாரின் திருவுருவப்படத்துக்குத்தான். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் 138-வது பிறந்தநாள். அதையொட்டி ஜெயலலிதா இந்த மாரியாதையை செலுத்தினார். இதுதான் ஜெயலலிதா கடைசியாக செய்த மரியாதை.
கடைசி இரங்கல் – இசைக் கலைஞனுக்கு!
கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, நவம்பர் 22-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதான் ஜெயலலிதாவின் பெயரில் வெளியான கடைசி இரங்கல் அறிக்கை.
கடைசி குடைச்சல் – சசிகலா புஷ்பா!
இந்தியா அரசியலில், தனது தனிப்பட்ட வாழ்வில் என இரண்டிலும் ஜெயலலிதா சந்தித்த எதிரிகள் யாரும் சாதரணமானவர்கள் அல்ல. ஆனால், அந்த ஜாம்பவான்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு கடைசி நேர குடைச்சலாக இருக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவால் அரசியலில் அங்கீகாரம் பெற்று, ஜெயலலிதாவால் பதவி கொடுத்து அழகு பார்க்கப்பட்ட சசிகலா புஷ்பா கடைசி நேரத்தில் ஜெயலலிதாவை அகில இந்திய அளவில் சர்ச்சைக்குள்ளாக்கினார். இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து, ஜெயலலிதா மீது புகார் வாசித்தார் சசிகலா புஷ்பா.
கடைசி கைநாட்டா? கையெழுத்தா?
திருச்சி, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘பி-பார்ம்’-ல் அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துப்போட வேண்டும். ஆனால், அதில் ஜெயலலிதா கைநாட்டு வைத்திருந்தார். அதுதான் அவர் வாழ்நாளில் முதலும் கடைசியுமாக வைத்த கைநாட்டாக இருக்கும்.
ஆனால், அதன்பிறகு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி தெரிவித்து நவம்பர் 22-ம் தேதி ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் இருந்த கையெழுத்துத்தான் அதிகாரபூர்வ ஜெயலலிதாவின் கடைசி கையெழுத்து.
கடைசி நாட்கள் 75!
செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். அன்றில் இருந்து அவர் உயிர் பிரியும் கடைசி தருணம்வரை, அவர் அப்போலோவில்தான் இருந்தார். ஜெயலலிதா தன்னுடைய வாழ்நாளின் கடைசி 75 நாட்களை அப்போலோவில் கழித்தார். அரண்மனையைப்போன்ற வேதா நிலையம், அதிகாரம் செலுத்தும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திராட்சைத் தோட்டம் என்று எதுவும் கடைசி நாட்களில் ஜெயலலிதாவுக்குப் பயன்படாமல் போனது.
கடைசி சட்டமன்ற உரை!
6 முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 15-வது சட்டமன்றத்தின், முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதுதான், அவருடைய கடைசி சட்டமன்ற உரை. அந்த உரைகள், அவருடைய துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளில் பேசியவை. ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர், பங்கெடுத்த கடைசி பட்ஜெட் என இரண்டுமே இதற்குள் அடங்கும்.
கடைசி தேர்தல் பிரசாரம்!
2016 சட்டமன்றத் தேர்தலுக்கு ஜெயலலிதா வழக்கம்போல் பிரசாரம் செய்யவில்லை. சென்னை, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு என்று தேர்ந்தெடுத்த ஊர்களில் மட்டும் பிரசாரம் செய்தார். அதுவும் அவர் பொதுக்கூட்டம் போட்டு, அதையே தேர்தல் பிரசாரம் ஆக்கினார். அப்படி அவர் கடைசியாக செய்த தேர்தல் பிரசாரம், சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம்.
பழிவாங்கிய கடைசி வெளிமாநிலப் பயணம்!
தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா கடைசியாக சென்ற வெளிமாநிலம் கர்நாடகம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெறுவதற்காக 2014 செப்டம்பர் 27-ம் தேதி அங்கு சென்றார், ஜெயலலிதா. ஆனால், 20 வருடமாக இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவை பழிவாங்கியது. குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் 22 நாட்களை கழிக்க வேண்டியதானது.
கடைசி வழக்கு –
ஜெயலலிதாவின் வாழ்வில் 20 ஆண்டுகள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்த வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு. அவர் 1996-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போது தொடரப்பட்டு, 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய வழக்கு. ஜெயலலிதா இறந்துவிட்டார். ஆனால், அவர் சந்தித்த அந்த கடைசி வழக்கு இன்னும் உயிரோடு இருக்கிறது.
கடைசி தொகுதி – ஆர்.கே.நகர்
ஜெயலலிதா பர்கூர், ஆண்டிபட்டி, ஸ்ரீரங்கம் என்று பல தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானபிறகு அவர் போட்டியிட்ட தொகுதி ஆர்.கே.நகர். அப்போது அந்த மக்கள் தந்த வெற்றி, ஜெயலலிதாவை 2016 சட்டமன்றத் தேர்தலிலும் ஆர்.கே நகரிலேயே போட்டியிட வைத்தது. அப்போதும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதாவின் இறப்பு, முதலமைச்சரை இழந்த தமிழக மக்களுக்கு ஒரு இழப்பு. ஜெயலலிதாவின் இறப்பு, முதலமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ என்ற வகையில் ஆர்.கே.நகர் மக்களுக்கு இரண்டு இழப்பு.
கடைசி பயணம் –
ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினாவிற்கு ஜெயலலிதாவின் உடல் 06.12.2016 கொண்டு செல்லப்பட்டது தான் அவருடைய கடைசிப் பயணம்.