தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர் பாவாடைராயன். அவரது மகன் ஜெயராமன். (வயது 60). கூலி தொழிலாளியான இவர் அதிமுக கட்சியின் தீவிர தொண்டர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை தனியார் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த ஜெயராமன் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பினால் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து கூவத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவப்பிரகாசம் (65). நேற்று மதியம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் என்று செய்தி வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வீரமலையை சேர்ந்தவர் சின்னபிள்ளை (53). அதிமுக கிளை செயலாளர். நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதேபோல், சின்னகரடியூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (76), அதிமுக தொண்டர். நேற்று மாலை முதல்வர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
காவேரிப்பட்டணம் ஒன்றியம் விலாங்குமுடியை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). அதிமுகவின் தொண்டர். நேற்று இரவு டிவியில் முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் ஊட்டமலையை சேர்ந்தவர் முருகேசன் (55). அதிமுக தொண்டர். நேற்று மாலை முதல்வர் இறந்ததாக வெளியான தகவலைக் கேட்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் சென்றாயனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (65), .நாகை கீச்சாங்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராமன்(54). திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (80). ஆகியோர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான மனுநாயகி ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகையாகவும் இருந்துள்ளார்.
இவர்களை போல் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.