உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் கொழும்பில்….! கத்தோலிக்க சபை எதிர்ப்பு

உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் அமைக்கும் திட்டத்தை கத்தோலிக்கச் சபை எதிர்த்துள்ளது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்கில் காலி முகத் திடலில் மாபெரும் நத்தார் மரமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பாரிய பொருட் செலவில் நத்தார் மரம் அமைக்கப்படுவதனை எதிர்ப்பதாக கத்தோலிக்கச் சபை நேற்று அறிவித்துள்ளது.

கொழும்பு பேராயர் மற்றும் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த நத்தார் மரத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டு வருவதாக தமக்கு தகவல் கிடைத்தது எனவும் அதற்காக செலவிடப்படும் பணத்தை வறியவர்களுக்கு செலவிடப்பட முடியும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

நத்தார் மரம் அமைக்கும் அமைச்சு எதுவென்பது தெரியாது, நத்தார் மரம் அமைக்கப்பட்டு வருமாயின் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நத்தார் பண்டிகையின் மெய்யான அர்த்தம் உண்டு மகிழ்வது அல்ல, நத்தார் பண்டிகை பற்றி சிலர் பிழையான புரிதல்களுடன் இருக்கின்றார்கள்.

நத்தார் தாத்தாக்கள் இன்று விற்பனைப் பண்டமாக மாறியுள்ளனர்.

இருப்பதனை ஏனையவர்களுடன் பகிர்ந்து நத்தாரை கொண்டாட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.