சீக்கிரம் வாங்க, எனக்கு நல்ல ஃபிரண்ட் வேணும்.. சோவுக்கு ஜெ. அழைப்பு விடுத்த அந்த தருணம்!

சோவை எப்போதுமே தனது நல்ல நண்பராகத்தான் ஜெயலலிதா பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் புத்திசாலி என நினைத்த ஒரே நபர் சோ மட்டும்தான். அதேபோலத்தான் சோவும், ஜெயலலிதா மீது மிகுந்த அன்பும், நட்பும் பாராட்டி வந்தார். ஜெயலலிதாவுக்கு சிக்கல் வந்தபோதெல்லாம் அவருக்கு ஆலோசனை கொடுத்தவர் சோதான்.

சோ நடத்தி வந்த துக்ளக் பத்திரிகை திமுகவை கடுமையாக சாடுவது வழக்கம். அதிமுகவை ஒருபோதும் பாராட்டத் தவறியதும் இல்லை. இது உலகம் அறிந்த விஷயம்.

இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பு பழ. கருப்பையா அதிமுக ஆட்சி குறித்து துக்ளக் ஆண்டு விழாவில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியது ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் சோவுடன் பேசுவதைக் கூட சில காலம் அவர் நிறுத்தி விட்டார்.

ஆனால் சவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து ஜெயலலிதா துடித்துப் போனார். அவரைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்தார்.

அப்போது சோவிடம், சீக்கிரமா திரும்பி வாங்க, எனக்கு உங்களைப் போன்ற நண்பர் தேவை என்று சிரித்தபடி கூறினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா அப்படிக் குறிப்பிட்டது இப்போது உண்மையாகவே நடந்து விட்டது. ஜெயலலிதா இறந்த சில மணி நேரங்களிலேயே அவரைத் தேடிப் போய் விட்டார் சோ.