நடிகர் | விஷ்ணு |
நடிகை | ஸ்ரீ திவ்யா |
இயக்குனர் | சுசீந்திரன் |
இசை | டி.இமான் |
ஓளிப்பதிவு | சூர்யா |
இதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் உடலை மேல் ஜாதியினர் பகுதி வழியாக எடுத்துச் செல்ல வழிவகை செய்கிறார். இந்நிலையில், கீழ் ஜாதியை சேர்ந்த விஷ்ணு விஷால், பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவரை கலெக்டர் ஆக்கவேண்டும் என்று பார்த்திபன் முயற்சி செய்கிறார்.
ஆனால், கீழ்ஜாதியை சேர்ந்த விஷ்ணுவிஷால் பெரிய ஆளாக வளர்வது மேல் ஜாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில், மேல் ஜாதியைச் சேர்ந்த ஸ்ரீதிவ்யாவின் அப்பா, கீழ் ஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவை மேல் ஜாதிக்காரர்களே கொலை செய்துவிட்டு, அந்த கொலைப் பழியை விஷ்ணுவிஷால் மீது போட்டு, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வரும் விஷ்ணுவிஷாலை உயர் ஜாதியை சேர்ந்த போலீஸ் அதிகாரியான ஹரிஷ் உத்தமன் மீண்டும் விசாரணை என்ற பெயரில் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடித்து உதைக்கிறார். இதன்பிறகு விஷ்ணு மாயமாகிறார். அவர் எங்கு சென்றார் என்று ஊரே தேட ஆரம்பிக்கிறது.
இனியும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று மேல் ஜாதிக்காரர்களுக்கு எதிராக திட்டம் ஒன்றை தீட்டி தனது போராட்டத்தை தொடங்குகிறார் பார்த்திபன். இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? மாயமான விஷ்ணு விஷால் கிடைத்தாரா? என்பதே மீதிக்கதை.
மாவீரன் கிட்டு என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விஷ்ணு விஷாலுக்கு இப்படத்தில் கம்பீரமான கதாபாத்திரம். அதை தனது இயல்பான நடிப்பால் நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் மாதிரி வந்து போயிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.
இதுவரை பார்த்திராத புதுவிதமான பார்த்திபனை இப்படத்தில் பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நடிப்பை கொடுத்து ரசிக்க வைக்கிறார். இவர்தான் முதல் ஹீரோ என்று சொல்லும்விதமாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.
1980-களில் வேரூன்றியிருந்த ஜாதி பிரிவினையை இப்படத்தில் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் சுசீந்திரன். அவர் என்ன நினைத்தாரோ அதை சுதந்திரமாக இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் வரும் பாடல்கள் படத்திற்கு கொஞ்சம் தொய்வை கொடுத்திருக்கின்றன. கமர்ஷியல் படத்திற்குண்டான அம்சங்கள் படத்திற்கு கைகொடுக்காவிட்டாலும் திரைக்கதையின் பலம் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. யுகபாரதியின் வசனங்கள் படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது.
டி.இமானின் பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் இதம். குறிப்பாக ‘இணைவோம்’ என்ற பாடலும் சரி, அதற்கான காட்சிகள் அமைத்த விதமும் அருமையாக இருக்கிறது. படத்தின் கதைக்களம் 80-களில் நடப்பதால் அந்தக் காலகட்டத்திற்குண்டான ஒளியமைப்புடன் கூடிய காட்சியமைப்புகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா.
மொத்தத்தில் ‘மாவீரன் கிட்டு’ வெற்றி பெறுவான்.