மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. பலர் கண்ணீர் வடித்தனர். ஏராளமான பெண்களும், தொண்டர்களும் கதறி அழுதனர்.
முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் செல்ல, பொது மக்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் பெரும்பாலானோர் உள்ளே சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. இரவு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனவே, உள்ளே யாரும் நெருங்கமுடியவில்லை.
இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏராளமானோர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நேரம் ஆக ஆக இங்கு சென்று அஞ்சலி செலுத்துவோர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் தலைமையில் 60 பேர் இன்று காலை 8.30 மணியளவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்கள்.
அதன்பிறகு சமாதிக்கு இடதுபுறம் அமர்ந்து மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தினார்கள்.
அப்போது தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘புரட்சி தலைவி அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
தமிழகமே துயரத்தில் இருக்கும் போது எங்களாலும் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினோம்‘ என்றார்.
பசும்பொன் மக்கள் கழக நிறுவன தலைவர் இசக்கிமுத்து தலைமையிலும் நிர்வாகிகள் வந்து மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தினார்கள்.
புரட்சி தலைவி அம்மாவின் மரணத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முடிகாணிக்கை செலுத்தினோம் என்று இசக்கிமுத்து தெரிவித்தார்.
ஜெயலலிதா சமாதிக்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் பலரும் இன்று மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர். ஏராளமான பெண்கள் அழுது அஞ்சலி செலுத்தினார்கள்.