தாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் – கண்டறிவது எப்படி?

கருக்குழாய் கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும்.

சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை.

கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக்குழாயில் வளர்ந்தால் அந்தக்கருவை காப்பாற்றமுடியாது. கவனிக்காமல்விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம்.

இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு உருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச்சென்று கர்ப்பப்பையினுள் வைக்கிறது.

அங்கு அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும்.

கர்ப்பப்பை மட்டுமே கருவைத்தாங்கி அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது.

மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளரமுடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச்செய்துவிடும். சில நேரங்களில் கருவானது குழாயிலேயே அழுகிப்போகலாம்.

அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் கருவானது கர்ப்பப்பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

அப்படித்தெரியாவிட்டால் கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம். இரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா என கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்றமுடியாது.

அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச்செய்யவேண்டும்.

அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து கருக்குழாயை பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் கருக்குழாயையும் நீக்கவேண்டி வரும்.

இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால் அந்தப்பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது.