பாரியளவு மோசடிகளை மறைக்க டீல் பேசும் சில அமைச்சர்கள்!

பாரியளவு மோசடிகள் ஊழல்கள் தொடர்பிலான விசாரணைகளை நிறுத்த சில அமைச்சர்கள் முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கழுத்தைக் கொடுத்து உயிர்த் தியாகம் செய்து மிகவும் சிரமபப்பட்டு தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டது.தேர்தல் வெற்றியின் பின்னர் டை, கோர்ட் அணிந்து கொண்டு சிலர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இவ்வாறானவர்கள் பாரியளவு ஊழல் மோசடி விசாரணைகளை நிறுத்த டீல் போட்டு வருகின்றனர்.

பாரியளவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டது. எனினும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிலரின் டீல்களினால் இந்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பாரிய நிதி மோசடிகள் அரச சொத்து துஸ்பிரயோகங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக 140000 ரூபா துஸ்பிரயோகம் பற்றியும், வாகனங்கள் பயன்படுத்தியமை பற்றியும் விசாரணை நடத்தப்படுகின்றது.

இவ்வாறு சென்றால் பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த தனியான பிரிவு ஒன்றை ஆரம்பிக்க நேரிடும். பாரிய மோசடிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம் எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.