திருச்சிவாழ் ஈழத்தமிழர்களால் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டார் தமிழ்நாடு முதல்வர்

உயிரிழந்த தமிழ்நாடு முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் திருச்சியில் நினைவு வணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடாத்தப்பட்டுள்ளது.

திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் சார்பில் நேற்று வணக்க நிகழ்விற்காக தயார் செய்யப்பட்ட பதாகைக்கு மாலை அணிவித்து மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைக்காக…

ஈழத்தமிழர் உரிமைக்காக…

தமிழர்களின் வாழ்வுரிமைக்காக…

ஓங்கி ஒலித்த சிம்மக்குரல் ஓய்ந்தது…!

மீளாத் துயருடன்… ஈழத்தமிழ் மக்கள்!

என்ற வாசகத்துடன் முதல்வரின் படம் பொறித்து தயார் செய்யப்பட்ட பதாகை வைக்கப்பட்டு வாழை மரங்கள் கட்டியும் தோரணங்கள் தொங்கவிட்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

கே.கே.நகர் காவல் ஆய்வாளர் மற்றும் ஈழத்தமிழர் ஒருவரும் ஈகைச் சுடரை ஏற்றினர். கே.கே.நகர் காவல் ஆய்வாளர் மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, கூடியிருந்த ஈழத்தமிழர்கள் வரிசையாக வந்து மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள்.

நூற்றிற்கு மேலான ஈழத்தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.