இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த நபிகளார்

தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாமை ஏற்காமல் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சிறு கற்களால் அடித்துத் தாக்கி, பழித்துப் பேசி நகரத்தைவிட்டு வெளியே அனுப்பினர். நபிகள் நாயகம் (ஸல்) தாயிஃப் நகரத்திலிருந்து சில மைல் தொலைவில் இருக்கும் ரபிஆவின் மகன்கள் ஷைபா- உத்பாவிற்குச் சொந்தமான திராட்சை தோட்டத்தின் நிழலில் உட்கார்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காயம்பட்ட நிலையைப் பார்த்த ரபிஆவின் மகன்கள் தங்களின் வேலையாளான அத்தாஸ் என்பவரிடம் நபி (ஸல்) அவர்களுக்குத் திராட்சை குலையை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார்கள். இறைவனிடம் பிரார்த்தித்து முடித்த வேளையில் அவனுடைய கருணையாகக் கிடைத்த பழத்தை நபி முஹம்மது (ஸல்) ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லி சாப்பிட்டார்கள்.

இதைக் கேட்ட அத்தாஸ் அதனை வியந்தவர்களாக, “இது இந்த ஊர் மக்கள் சொல்வழக்காகத் தெரியவில்லையே! மிகவும் வேறுபட்டதாக உள்ளதே!? நீங்கள் யார்?” என்று கேட்டார்.

நபி முஹம்மது (ஸல்) முகம் மலர்ந்தவராக “உங்களுக்கு எந்த ஊர்? உங்களின் மார்க்கம் என்ன?” என்று அத்தாஸிடம் கேட்டபோது, அவர் “நான் நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன்” என்றார். அதற்கு நபி (ஸல்) “யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே? அவர் எனது சகோதரர். அவரும் என்னைப் போலவே ஓர் இறைத்தூதர்” என்று சொன்னவுடன் அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றி முத்தமிட்டார்கள். இதைத் தொலைவிலிருந்து கவனித்த ரபிஆவின் மகன்கள் “அத்தாஸை அவர் குழப்பிவிட்டார்” என்று பேசிக் கொண்டார்கள்.

அத்தாஸ் திரும்பி வந்து “முதலாளிமார்களே, இப்பூமியில் இவரைவிடச் சிறந்தவர் இல்லை. இவர் எனக்குச் சொன்ன விஷயத்தை ஓர் இறைத்தூதரைத் தவிர வேறு யாருமே சொல்ல முடியாது” என்று விளக்க முற்பட்டதை ரபிஆவின் குமாரர்கள் பொருட்படுத்தவில்லை.

நபி முஹம்மது (ஸல்) அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தார்கள். சுய உணர்வற்று ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடம் வரை அடைந்து தனது தலையை உயர்த்தியபோது அங்கே வானத்தில் ஒரு மேகத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) நிழலிட்டுக் கொண்டதுபோல் இருந்தார்கள்.

வேதனை சூழ்ந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாடிய முகத்தைப் பார்த்து “உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும், அதற்கு அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் அறிவான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிக்க மலைகளின் வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று வானவர் ஜிப்ரீல் (அலை) கூறினார்கள்.

மலைகளை நிர்வகிக்கும் வானவர் “அஸ்ஸலாமு அலைக்கும் நபியே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடுங்கள். அந்நகரின் அருகிலுள்ள இரண்டு மலைகளையும் அம்மக்களின் மீது புரட்டிப் போட்டுவிடவா, அல்லது அவர்களை இரு மலைகளுக்கிடையில் நசுக்கிவிடவா? உங்களிடன் கட்டளையின்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்” என்று கூறினார்.

கருணையின் உருவான நபி முஹம்மது (ஸல்), “வேண்டாம், அவர்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள். தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாமை ஏற்காவிட்டாலும் அவர்களின் சந்ததிகள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல், அவனை மட்டுமே வணங்குபவர்களாக அல்லாஹ் நிச்சயம் உருவாக்குவான் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே அவர்களைத் தண்டிக்க வேண்டாம்” என்று உறுதியாகச் சொன்னார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வேதனையிலும் தன்னுடைய பலவீனத்தை மட்டும் மனம்விட்டு முறையிட்டார்களே தவிர அல்லாஹ்விடம் புகாராகச் சொல்லவில்லை. கோபத்திலும் அம்மக்களுக்குத் தீங்கிழைக்க வேண்டுமென்று எண்ணவில்லை .

(ஸஹீஹ் புகாரி 3:59:3231, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

– ஜெஸிலா பானு.