பிரசித்திபெற்ற பத்மநாபசாமி கோவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பாதாள அறைகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர புதையல்கள் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து உலகின் பணக்கார கோவில் என்ற சிறப்பை பெற்று உள்ளது.
மிகவும் பழமையான இந்த கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளது. ஆண் பக்தர்கள் வேட்டி, துண்டு அணிந்துதான் வர வேண்டும். அதே போல பெண் பக்தர்கள் சேலை தவிர வேறு ஆடைகள் அணிந்து வரக்கூடாது. நாகரீக ஆடைகள் அணிந்து வரும் பெண்கள் தங்கள் ஆடையின் மீது வேட்டியை கேரள பாணியில் ‘முண்டு’ போல அணிந்துகொண்டு தான் வரவேண்டும்.
இந்த நிலையில் பத்மநாப சுவாமி கோவிலின் நிர்வாக அதிகாரி சதீஷ், பெண்கள் ஆடை கட்டுப்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கினார். சுடிதார் அணிந்து வரவும் அனுமதி வழங்கினார். இதற்கு இந்து இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம், ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலுக்கு பெண்கள் சுடிதார், சல்வார் அணிந்து வரக்கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.