அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் ஜெயலலிதா எப்படி இருந்தார்?
ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற எந்த ஒரு புகைப்படமும் வெளியாகாத காரணத்தால் 75 நாட்களும் ஜெயலலிதா தொடர்பான சந்தேகங்கள் தமிழக மக்கள் மனதில் பலவிதமாக எழுந்தன. ஜெயலலிதா உயிரோடுதான் இருக்கிறாரா? என்று கூட மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
உண்மையில் அந்த 75 நாட்களும் ஜெயலலிதா நன்றாகவே இருந்தார் என்ற ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும், நர்சுகளும் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்குப் பிறகு அதுபற்றி வாய் திறந்து பேச தொடங்கியுள்ளனர்.
ஜெயலலிதாவை கவனித்துக் கொள்ள ஒரு மூத்த நர்சு தலைமையில் 15 நர்சுகள் பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நர்சுகள் தலா 5 பேர் வீதம் 3 ஷிப்ட்களாக ஜெயலலிதாவுக்கு பணி விடை செய்தனர்.
இந்த 16 நர்சுகளில் சி.வி. ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி ஆகிய மூன்று நர்சுகள் ஜெயலலிதா மனதில் தனி இடம் பிடித்திருந்தனர். அவர்கள் மூவரையும் ஜெயலலிதா மிகவும் நேசித்தார். அவர்களிடம் அதிக பாசத்தை காட்டினார்.
அந்த 3 நர்சுகளையும் ஜெயலலிதா செல்லமாக “கிங்காங்” என்று பெயர் சூட்டி அழைத்தாராம்.
ஜெயலலிதா நர்சுகளிடம் மிக சாதாரணமாக சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இதுபற்றி நர்ஸ் வி.சி. ஷீலா கூறியதாவது:-
தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நான் நுழைந்ததுமே ஜெயலலிதா என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரிப்பார். என்னை அருகில் அழைத்து பேசுவார். உனக்கு என்ன வேண்டும் கேள். இப்போதே செய்து தருகிறேன் என்று பல தடவை கூறினார்.
அவரை இரும்புப் பெண்மணி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்து கொண்டார். நாங்கள் செய்த பணி விடைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட பத்திய முறையிலான உணவு வகைகளை சாப்பிட அவர் கஷ்டப்பட்டார். என்றாலும் அவர் அதை சாப்பிட தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வார்.
இந்த ஒரு ஸ்பூன் உணவை ஷீலாவுக்காக சாப்பிடுகிறேன். இதை ரேணுகாவுக்காக சாப்பிடுகிறேன். இதை சாமுண்டீஸ்வரிக்காக சாப்பிடுகிறேன் என்று சொல்லி, சொல்லி சாப்பிடுவார். எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்.
ஜெயலலிதாவுக்கு உப்புமா, பொங்கல் இரண்டும் மிகவும் பிடித்த உணவாகும். அவற்றை வீட்டில் இருந்து வரவழைத்து சாப்பிட்டார். ஒரு தடவை சாண்ட்விச் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
செயற்கை சுவாசம் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு டாக்டர்கள் மற்றும் எங்களிடம் நன்றாக பேசினார். எங்களுக்கு அவர் மருத்துவ டிப்ஸ் எல்லாம் கொடுத்தார். எங்கள் தலை அலங்காரத்தை கூட மாற்ற சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் சத்தியபாமா கூறுகையில், “பெண்கள் எப்போதும் ‘பிசி’யாக இருக்கிறோம். நாம் நம்மை கவனித்துக் கொள்ளவும் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என ஜெயலலிதா கூறினார்” என்றார்.
அடிக்கடி ஊசி போடப்படுவதை அவர் விரும்பவில்லை. அதுபற்றி அவர் எழுதி காட்டியதாக டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் கூறினார்.
ஒரு தடவை டாக்டர்களும், நர்சுகளும் சூழ்ந்து நின்ற போது ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் காபி வழங்கப்பட்டது. அதை குடித்த ஜெயலலிதா முகம் மாறியது.
அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளிடம், “என்ன காபி இது. வாங்க… எல்லோரும் என் வீட்டுக்குப் போகலாம். கொடநாட்டு டீ தயாரித்து தருகிறேன்” என்றாராம்.
சினிமா பாடல்கள் என்றால் ஜெயலலிதா மிக விரும்பி கேட்பார். தன் அறையில் பழைய பாடல்களை ஒளிபரப்ப செய்து டி.வி.யில் பார்த்தார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்ற தகவல் டி.வி.யில் அறிவிக்கப்பட்டதும், அதை பார்த்து ஜெயலலிதா புன்னகைத்தாராம். அதன் பிறகு ஜெயலலிதா உடல்நிலையில் மிக வேகமான முன்னேற்றம் ஏற்பட்டதாக நர்சுகள் கூறினார்கள்.
ஜெயலலிதா தினமும் ஒரு மணி நேரம் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பதை வழக்கத்தில் வைத்திருந்தாராம். கோவில்களில் தனக்காக நடத்தப்படும் பிரார்த்தனைகளைப் பார்க்கும் போதெல்லாம் மிகவும் நெகிழ்ச்சி அடைவாராம்.
இதுபற்றி நர்ஸ் ஷீலா கூறுகையில், “நான் குணமாகி விடுவேன் என்று அவர் அடிக்கடி கூறுவார். நன்றாக குணமான பிறகு எங்களை எல்லாம் தமிழக சட்டசபைக்கு அழைத்து செல்வதாக கூறி இருந்தார்” என்றார்.
சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த பிசியோதெரபி பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி, ஜெயலலிதா தினமும் பந்து வீசி எறிந்து பயிற்சி செய்தார். அவரிடம் பந்துகளை எடுத்து கொடுத்து நர்சுகள்தான் விளையாட்டில் ஈடுபட்டனர்.
அப்போது நர்சுகள் கூறுவதை ஜெயலலிதா அப்படியே ஏற்றுக்கொண்டாராம். பந்துகளை வீசி பயிற்சி செய்யும் சில சமயம் ஜெயலலிதாவுக்கு சலிப்பாக இருந்ததாம். என்றாலும் நர்சுகள் கூறியதால் மறுக்காமல் செய்தாராம்.
பந்து வீசும் பயிற்சி மிக, மிக போரடித்தால் மட்டுமே, “எனக்கு சோர்வாக உள்ளது. பிறகு கொஞ்ச நேரம் கழித்து விளையாடுவோமா?” என்று நர்சுகளிடம் மென்மையாக கேட்பாராம்.
நர்ஸ் ரேணுகா கூறுகையில், “ஜெயலலிதா ஒரு பென்டிரைவ் வைத்திருந்தார். பழைய தமிழ் – இந்தி பாடல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றை அடிக்கடி கேட்டு ரசித்தார்” என்றார்.
சில நர்சுகளிடம், “சென்னையில் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்? எப்படி வேலைக்கு வருகிறீர்கள்? இவ்வளவு அதிகாலையிலேயே எப்படி வந்தீர்கள்? உங்கள் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள்” என்று கூறி உள்ளார்.
இந்த தகவல்களை அப்பல்லோ டாக்டர்களும், நர்சுகளும் நேற்று மிகவும் கண் கலங்க தெரிவித்தனர்.
சில சமயம் ஜெயலலிதா நர்சுகளிடம், “நான்தான் முதல்-அமைச்சர். நான் உங்களுக்கு உத்தரவிட்டதை செய்யுங்கள்” என்று வேடிக்கையாக கூறுவாராம்.
ஆனால் டாக்டர்களும், நர்சுகளும் என்ன சொன்னாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஒருநாள் ஜெயலலிதா இருந்த அறையில் இளம் நர்சுகளிடம், இவர் முதல்வராக இருந்தாலும் தான் சொல்வது போல எப்படி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்று கூறி சில அறிவுரைகள் வழங்கினாராம்.
அப்போது ஜெயலலிதா மெல்லிய குரலில், “இங்கும் நான்தான் உங்களுக்கெல்லாம் “பாஸ்” என்றாராம். அதைக் கேட்டு டாக்டர்களும், நர்சுகளும் சிரித்தார்களாம்.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களும் இப்படி நிறைய ருசிகரங்கள் நடந்ததாக நர்சுகள் சொல்கிறார்கள். நர்சுகள் ஷீலா, ரேணுகா, சாமுண்டீஸ்வரி, சூப்பிரண்டு சுனிதா ஆகியோர் ஜெயலலிதாவுடனான அனுபவங்களை சொல்லும்போது பிரமிப்பாக உள்ளது.
இப்படியெல்லாம் இருந்த ஜெயலலிதா திடீரென தன் பேச்சை, தன் மூச்சை நிறுத்தியதை அந்த நர்சுகளும் இன்னமும் நம்ப முடியாமல் தவிக்கிறார்கள்.