போயஸ் கார்டன் என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருபவர் ஜெயலலிதாதான். ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று ஜெயலலிதாவின் வீட்டுக்கு செல்ல வலது புறமாக திரும்பும் இடத்தில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
இதனால் போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாகவே காணப்படும். அதிலும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த கால கட்டங்களில் பல மடங்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
ஜெயலலிதா அங்கு வசித்து வந்தபோது, அவர் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போதும், வீட்டுக்கு வரும்போதும் அவரை பார்ப்பதற்காக அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருப்பார்கள். தற்போது ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வினரும், பொது மக்களும் அணி அணியாக திரண்டு செல்கின்றனர்.
இருப்பினும் வீட்டுக்குள் சென்று அவர்களால் பார்க்க முடியவில்லை. வெளியில் நின்று கண்ணீர் வடித்தபடியே ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கையெடுத்து கும்பிடுகிறார்கள்.
ஜெயலலிதாவின் வீட்டுக்குள் சென்று பார்ப்பதற்கு ஆசைப்படுகிறோம். ஆனால் அது இயலாத காரியமாக உள்ளது என்றும் தொண்டர்கள் இன்று ஆதங்கப்பட்டனர்.
இந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்பட்டது போல போயஸ் கார்டன் இல்லத்தையும் மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை அ.தி.மு.க.வினர் எழுப்பி இருக்கிறார்கள். அதுபோன்று நினைவு இல்லம் ஆக்கி அங்கு எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள், அவரது சாதனை விவரங்களை இடம் பெற செய்ய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும் உள்ளது.