லண்டனில் உள்ளது மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) இந்த கிளப் தான் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை ஆராய்ந்து ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கும்.
கிளப் தலைவராக மைக் பிரியர்லே, தலைமை நிர்வாகிகள் ஜான் ஸ்டெப்ஹன்சன் உறுப்பினர்களாக ரிக்கி பாண்டிங், ரமீஸ் ராசா ஆகியோர் உள்ளனர்.
இந்த கிளப் கமிட்டி, கிரிக்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. கால்பந்து, ஆக்கி போட்டிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்படும் முறை உள்ளது.
அதேபோல் கிரிக்கெட் போட்டியில் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காட்டும் முறை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரை செய்து உள்ளது.
இதேபோல் ‘பேட்’ அளவு குறித்தும் யோசனை தெரிவித்துள்ளது. அதுபற்றி ரிக்கி பாண்டிங் கூறுகையில், 60 சதவீத வீரர்கள் பேட் விளிம்பு பகுதி 40 மில்லி மிட்டர் அளவு இருக்க ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
நாங்கள் பேட் முனை பகுதிகள் 38 முதல் 42 மில்லி மீட்டர் வரை இருக்க விரும்புகிறோம். பேட் விளிம்பில் பந்து பட்டு சிக்சர் செல்வதை நாம் பார்த்து வருகிறோம். பேட்டிங், பந்துவீச்சு இரண்டுக்கும் சரி சமமான அளவு வாய்ப்பு அளிக்க பரிந்துரைந்துள்ளோம்.
பேட் அளவு மாறுவதால் அதிரடியாக விளையாடும் வீரர்களுக்கு பாதிப்பு இல்லை. பவுண்டரி, சிக்சர் தாராளமாக அடிக்கலாம் என்றார்.
சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், ரஞ்சி கிரிக்கெட்டில் இரு ஆடுகளங்கள் முறை பயன்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருந்தார். ஆனால் இதை எம்.சி.சி. கிளப் உறுப்பினர்கள் ஏற்க மறுத்து உள்ளது.
ரஞ்சி கிரிக்கெட் என்பது உண்மையான போட்டியில் விளையாடுவது போன்ற உணர்வை தருகிறது. அதில் இரு வேறு ஆடுகள முறையை பின்பற்றினால் பயிற்சிக்குரிய போட்டியாகிவிடும் என்று கூறி உள்ளது.
எம்.சி.சி. கிளப் கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் முதன்மை கமிட்டி குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த குழு பரிந்துரைகளை ஏற்று கொண்டால் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும்.