மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டயர் குக், இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பேட்டிக்கு பதில் ஜேக் பால் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஹமீதுக்குப் பதில் ஜென்னிங்சுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. தேநீர் இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இவர்கள் 49 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய ஜென்னிங்ஸ் அரை சதம் அடிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ எட்டியது.
முன்னதாக, 11-வது ஓவரின் கடைசி பந்தில் குக், பவுண்டரி அடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்தார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ரிக்கி பாண்டிங் 2555 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து லாயிட் (2344), மியான்தத் (2228), சந்தர்பால் (2171), கிளார்க் (2049) ஆகியோர் உள்ளனர்.